

சென்னை: ஆட்டோ ஓட்டுநர்களின் காத்திருப்புபோராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், ஆட்டோ முன்பதிவுக்கான செயலியை அரசு வடிவமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 26-ம் தேதிமுதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தோம்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் அழைத்திருந்தனர். அவர்கள், முதல்வர் வெளிநாடு சென்றிருக்கும் நேரத்தில் ஆர்ப்பாட்டம், கைது நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் எனவும், முதல்வர் தமிழகம் திரும்பியதும் 20 நாட்களில் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.
இதேபோல், டிஜிபி, தலைமைச் செயலர் அலுவலகங்களில் இருந்தும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டதையடுத்து, காத்திருப்பு போராட்டம் தள்ளிவைக்கப்படுகிறது என்றனர்.