

திருவள்ளூர்: முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை பெற்று, நலம் பெற்ற சிறுமி டானியாவை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், தன் இருக்கையில் அமர வைத்து மகிழ்ந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகேவீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ், சவுபாக்யா தம்பதியின் மகள் டானியாவுக்குஅரிய வகை முகச்சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையறிந்த முதல்வர்ஸ்டாலின் உடனடியாக சிகிச்சைக்கு உத்தரவிட்டார். இதன்படி தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 கட்ட அறுவை சிகிச்சை முடித்து வீடு திரும்பினார்.
இச்சூழலில், டானியாவின் குடும்ப சூழ்நிலையை கருதி மருத்துவ செலவுக்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், தன் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை நேற்றுமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டானியாவின் தாயாரிடம் வழங்கினார். அப்போது, டானியாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஆட்சியர் கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். சிறுமியின் விருப்பத்துக்கு இணங்க தன் இருக்கையில் அமர வைத்து மகிழ்ந்தார்.
இந்நிகழ்வுகளில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.