ஒற்றைச்சாளர முறையில் 17,828 ‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களுக்கு உரிமங்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னையில், அசோசெம் கூட்டமைப்பால் நடத்தப்பட்ட குழும மேம்பாடு கருத்தரங்கில் குழும வளர்ச்சி புத்தகத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார். உடன் டிஐஐசி மேலாண்மை இயக்குநர் ஹன்ஸ் ராஜ் வர்மா, அசோசெம் தமிழ்நாடு கவுன்சிலின் மாநிலத் தலைவர், அரவிந்தன் செல்வராஜ், கிராண்ட் தோர்டன் பாரத் பங்குதாரர் பேராசிரியர். பத்மானந்த் உள்ளிட்டோர்.
சென்னையில், அசோசெம் கூட்டமைப்பால் நடத்தப்பட்ட குழும மேம்பாடு கருத்தரங்கில் குழும வளர்ச்சி புத்தகத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார். உடன் டிஐஐசி மேலாண்மை இயக்குநர் ஹன்ஸ் ராஜ் வர்மா, அசோசெம் தமிழ்நாடு கவுன்சிலின் மாநிலத் தலைவர், அரவிந்தன் செல்வராஜ், கிராண்ட் தோர்டன் பாரத் பங்குதாரர் பேராசிரியர். பத்மானந்த் உள்ளிட்டோர்.
Updated on
2 min read

சென்னை: ஒற்றைச்சாளர அனுமதி திட்டம் மூலம் இதுவரை 17,828 குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபைகளின் கூட்டமைப்பு - அசோசெம் சார்பில் நிலையானகிளஸ்டர் மேம்பாடு - முழுமையான அணுகுமுறை குறித்த கருத்தரங்கம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கருத்தரங்கில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

தமிழகம், 49 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைக் கொண்டு தொழில் துறையில் நாட்டிலேயே 3-வது மிகப் பெரிய மாநிலமாக விளங்குகிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 9.22 சதவீதம். ஜவுளியில் 19.4 சதவீதம், கார் ஏற்றுமதியில் 32.5 சதவீதம், தோல் ஏற்றுமதியில் 33 சதவீதம் இந்த சாதனைகளுக்கு எல்லாம் உறுதுணையாகவும் அடித்தளமாகவும் விளங்குவது சிறு, குறு தொழில்கள் தான்.

நாட்டின் ஏற்றுமதியில் 8.89 சதவீத பங்களிப்பை வழங்கும் தமிழகம் ரூ.1.93 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தமிழகத்தில் 20 குறுந்தொழில் குழுமங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போதுரூ.113 கோடி அரசு மானியத்துடன் 25 குழுமங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் குறு, சிறு தொழில் நிறுவனங்களின் தரத்தை உலகத் தரத்துக்கு உயர்த்தும் வகையில் பெருங்குழுமத் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறுந்தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழிற்பேட்டை அமைக்க நகர்ப்புறங்களில் போதியநிலம் இல்லாததாலும், நிலத்துக்கான முதலீட்டை குறைக்கவும், உடனடியாக தொழில் தொடங்கவும், புதிய அடுக்குமாடி தொழில்வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டப்படி கிண்டி, அம்பத்தூர், சேலத்தில் ரூ.175.18 கோடியில் 364 கூடங்களுடன் அடுக்குமாடி தொழில் வளாகங்கள் விரைவில் முதல்வரால் திறக்கப்பட உள்ளது.

குறு, சிறு குழுமங்களுக்காக அறிவிக்கப்பட்ட 43 பொது வசதி மையங்களில் மத்திய - மாநில அரசு மானியமான ரூ.391.56 கோடி மதிப்பில் 28 மையங்கள் தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்துவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

தொழில்முனைவோர் தொழில்உரிமங்கள் பெறுவதில் உள்ளசிரமங்களை போக்க ஒற்றைச்சாளர அனுமதி திட்டம் முதல்வரால் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 19,429 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 17, 828 தொழில் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில்,கடந்த ஓராண்டில் மட்டும்9,603 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7.64 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு தொழில் முனைவோர் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சுய வேலைவாய்ப்பு திட்டங்களான நீட்ஸ், யுஒய்இஜிபி, பிஎம்இஜிபி ஆகிய திட்டங்களுடன், கடந்த ஆண்டு குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையின் கீழ் புதிதாக கொண்டு வரப்பட்ட உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான - பிஎம்எப்எம்இ ஆகிய4 திட்டங்களின் கீழ் ரூ.656.27 கோடி மானியத்துடன் ரூ.1,817 கோடிவங்கி கடனுதவி வழங்கி 22,425இளைஞர்கள் புதிய தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர்.

குறுங்குழுமங்கள், பெரும்குழுமங்கள் செயல்படுத்தப்படும்போது அமைக்கப்படும் எஸ்பிவிக்கள், தங்களின் பங்களிப்பு தொகையை அளிப்பதற்கு மிகுந்தகாலதாமதம் ஏற்படுகிறது. இதனால், மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கினாலும், திட்டத்தை தொடங்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, உங்களை போன்ற கூட்டமைப்பினர் – புதிய தொழில் முனைவோருக்கும் குழுமமாக செயல்பட முன்வரும் எஸ்பிவிக்களுக்கு உதவிகள், ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா, அசோசெம் தமிழ்நாடு கவுன்சில் மாநில தலைவர் அரவிந்தன் செல்வராஜ் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in