

சென்னை: கிண்டி புதிய அரசு மருத்துவமனை இயக்குநர் பதவிக்கு முன்னாள் டீன்கள் உள்ளிட்ட பலர் முயற்சி செய்து வருகின்றனர்.
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் 6 மேல்தளங்களுடன் 51 ஆயிரத்து 429சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையில், இதயம், நுரையீல், நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய் உள்ளிட்ட பல்துறைகளுடனும், 1,000படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் மருத்துவக் கருவிகள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
ஏற்கெனவே, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும்மருத்துவர்கள், செவிலியர்கள்,பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை விரைவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனையின் நிர்வாக அலுவலர், இயக்குநர் போன்ற முக்கிய பதவிகளுக்கு கடும் போட்டிநிலவி வருகிறது. மருத்துவமனை இயக்குநர் பதவிக்கு, அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் முன்னாள் டீன்கள் உள்ளிட்ட பலர் முயற்சி செய்து வருகின்றனர்.
நிர்வாக திறன், பணியாற்றும் திறன், முந்தைய செயல்பாடு உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் மருத்துவமனை இயக்குநர் நியமிக்கப்படுவர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.