Published : 16 Oct 2017 09:26 AM
Last Updated : 16 Oct 2017 09:26 AM

பெரியோர்களை மதிக்காத சமூகத்தில் ஒழுங்கும், அமைதியும் இருக்காது: பிறந்த நாள் விழா ஒன்றில் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி பேச்சு

பெரியோர்களை மதிக்காத சமூகத்தில் ஒழுங்கும், அமைதியும் இருக்காது என ஆடிட்டரும், ‘துக்ளக்’ வார இதழின் ஆசிரியருமான எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.ராகவன், ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி எஸ்.ராஜரத்தினம், கணக்கு தணிக்கையாளர் ஜி.நாராயணசாமி ஆகியோரின் 90-வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற குருமூர்த்தி பேசியதாவது:

இன்றைய காலகட்டத்தில் செல்வமும், அதிகாரமும் இருப்பவர்களுக்கு மரியாதை உள்ளது. ஆயிரக்கணக்கான கோடிகளில் வணிகம் செய்யும் தொழிலதிபர்கள், பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் அரசியல்வாதிகள்தான் மதிக்கப்படுகின்றனர். அவர்களைக் கண்டு மரியாதை மற்றும் அச்சமும் கொள்கிறார்கள். ஆனால், இதற்கும் குணத்துக்கும் தொடர்பில்லை.

90 வயதைக் கடந்துள்ள ஜி.நாராயணசாமி, பி.எஸ்.ராகவன், எஸ்.ராஜரத்தினம் ஆகிய மூன்று பெரியோர்களும் மிகப்பெரிய சாதனையாளர்கள். மிக உயரிய பொறுப்பில் இருந்தும் நேர்மையை நிலைநாட்டியவர்கள். இவர்களைப் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காகவே இந்த நிகழ்ச்சி.

இந்த மூவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது ஏராளம். பொதுவாக நாம் அனைவரும் சமூகத்திடம் இருந்துதான் அதிகம் கற்றுக் கொள்கிறோம். பள்ளி, கல்லூரி என கல்வி நிலையங்களில் கற்பது குறைவுதான். ஆனால், பதிலுக்கு சமூகத்துக்கு நாம் எதுவும் செய்வதில்லை. 90 வயதைக் கடந்துள்ள இந்த மூவரும் சமூகத்துக்காகவே வாழ்ந்தவர்கள். தர்மத்தைக் காப்பற்றியவர்கள்.

நமது பண்பாடு

பெரியோர்கள், பெண்களை மதிக்காத சமூகத்தில் ஒழுங்கும், அமைதியும் இருக்காது. நம் நாட்டில் 6 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள் இருந்தாலும் ஆயிரக்கணக்கில்தான் காவல் நிலையங்கள் உள்ளன.

ஆனாலும், நாட்டில் அமைதியும் ஒழுங்கும் இருக்கிறது. இதற்கு பெரியோர்களையும், பெண்களையும் மதிக்கும் நமது பண்பாடுதான் காரணம். இவ்வாறு எஸ்.குருமூர்த்தி பேசினார்.

விழாவில் பேசிய ஜெம் குழு நிறுவனங்களின் தலைவர் ஜெம் ஆர்.வீரமணி, ‘‘90-வது பிறந்த நாள் காணும் இந்த மூவரும் தங்களது துறைகளில் வரலாறு படைத்தவர்கள்.

பிரதமர், பல்வேறு முதல்வர்களுடன் பணியாற்றிய இவர்கள் சாதாரண நடுத்தர குடும்பத்தினரைப் போலவே வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடமிருந்து அறிவு, எளிமை, தன்னடக்கம், அர்ப்பணிப்பை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கேவிஎஸ். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x