

நாகப்பட்டினம்: தமிழகத்தில் 75 சதவீத பார்கள்உரிமம் இல்லாமல் செயல்படுவதாக வி.கே.சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
வேளாங்கண்ணியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். இந்தியாவுக்கு பெருமை என்ற அடிப்படையில் இதன் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் மட்டுமல்ல, யார்வந்தாலும் சந்திப்பேன். அதிமுகவை பொறுத்தவரை தொண்டர்களின் விருப்பம்தான் வெற்றிபெறும். தற்போது பிரிந்து கிடப்பவர்களை ஒருங்கிணைப்பதே எனது வேலை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழகத்தைக் காப்பாற்ற முடியும். அதை நான் நிகழ்த்திக் காட்டுவேன்.
தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் நடத்துவோருக்கு திமுகவினர் தொந்தரவு தருவதால் தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. மேலும், மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. சட்டம்- ஒழுங்கும் சரியில்லை. இதனால், வெளியில் இருந்து தொழில் நிறுவனங்கள் வர தயக்கம் காட்டுகின்றன. இந்த நிலையில், 2-வது முறையாக வெளிநாடு சென்று, என்னென்ன தொழிற்சாலைகளை கொண்டு வரப் போகின்றனர் என்பதைப் பார்ப்போம்.
திமுக ஆட்சியில் கவுன்சிலர்கள் முதல் உயர்நிலை பொறுப்புகளில் உள்ளவர்கள் வரை காவல்துறைக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது காவல் துறை எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும். இதன் காரணமாகவே கள்ளச் சாராய உயிரிழப்புகள் நேரிடுகின்றன.
தமிழகத்தில் 25 சதவீத பார்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. எஞ்சிய 75 சதவீத பார்கள் உரிமம் இல்லாமல் நடத்தப்படுகின்றன. இது, சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்றார்.