

பொள்ளாச்சி நகரில் 80 சதவீத மக்கள் தங்கள் வீடுகளில் கழிப்பறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மீதமுள்ள பகுதிகளில் கழிப்பறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு தீவிரமாக நடைபெறுகிறது என்று நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை தடுக்கும் சட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் வீடுகளில் கழிப்பறை பயன்பாட்டைக் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தலைமையிலான குழு கழிப்பறை பயன்பாட்டின் அவசியம், திறந்த வெளிக் கழிப்பிடத்தின் சீர்கேடுகள் குறித்து விளக்கம் அளித்து வருகிறது. கழிப்பறை இருப்பது உறுதி செய்யப்படாத பட்சத்தில் எச்சரிக்கை நோட்டீஸ்களும் வழங்கப்படுகின்றன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கழிவு நீர் பாதையை ஒட்டி அமைந்துள்ள வீடுகளில் இருந்து மனிதக் கழிவுகளை கழிவு நீர் பாதைகளிலேயே திறந்து விடுகின்றனர். இதனால் தொற்று நோய்கள் அதிகரிக்கின்றன. கிராமங்களில் திறந்தவெளிக் கழிப்பிடங்களைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். கழிவுநீர் கால்வாய்களில் மனிதக் கழிவுகளை திறந்து விடுபவர்கள், கழிப்பறை கட்டாதவர்கள் எனக் கணக்கெடுத்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இதில் முதல் கட்டமாக சுகாதாரத்தைப் பாதுகாக்க செய்ய வேண்டியவை, அரசு வழங்கும் உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் எனத் தெரிவித்தனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் கூறியதாவது: மனிதக் கழிவுகளை அகற்றுபவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கணக்கெடுப்பு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அவர்களாகவே இங்கு வந்து பெயரைப் பதிவு செய்யலாம். அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.
இது தவிர நகராட்சி பகுதிகளில் கழிப்பறை பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 35 இடங்களில் நகராட்சி கழிப்பிடங்கள் உள்ளன. 80 சதவிகித மக்கள் தங்கள் வீடுகளில் கழிப்பறையைப் பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முழு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
எச்சரிக்கை நோட்டீஸ்
கழிவு நீர் வாய்க்கால்களில் மனிதக் கழிவுகள் திறந்து விடுபவர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்படுகிறது. அதில், 30 நாளில் வீடுகளில் கழிப்பிடம், நச்சுத்தடை தொட்டி, உறிஞ்சுகுழி ஆகியவை அமைக்க வேண்டும். அது குறித்த விவரத்தை நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டத்தின் கீழும், மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் கீழும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு தொடரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.