Last Updated : 26 May, 2023 12:16 AM

 

Published : 26 May 2023 12:16 AM
Last Updated : 26 May 2023 12:16 AM

புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி அங்கீகாரம் ரத்தால் மீண்டும் அனுமதி பெற நிர்வாகம் விண்ணப்பம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது. இதனால், அனுமதி பெற மீண்டும் நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.

புதுவை கதிர்காமத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி 2011 முதல் இயங்கி வருகிறது. புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் 180 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆண்டுதோறும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கிறது. இங்கு இலவச மருத்துவ கல்வி மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி, இந்திய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்திய மருத்துவ ஆணையம் அதிகாரிகள் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையை பார்வையிட்டனர். இதையடுத்து இந்திய மருத்துவ ஆணையம் புதுவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக புதுவை மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கூறியதாவது: குற்றச்சாட்டுகளை முன்வைத்து நிர்வாக சீர்கேடுகளை களையும்படி புதுவை அரசுக்கு இந்திய மருத்துவ ஆணையம் 6 மாதம் முன்பே எச்சரித்துள்ளது. கல்லூரியின் அங்கீகாரமே ரத்தானதால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மட்டுமின்றி, ஏற்கனவே மருத்துவம் படித்து வரும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே உடனடியாக இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டும். அவரின் வாக்குறுதியை நம்பியே புதுவை மாநில மக்கள் ரங்கசாமிக்கு வாக்களித்தனர்.

அரசு மருத்துவக்கல்லூரி இந்த ஆண்டு செயல்பட, மருத்துவ மாணவர்களுக்கு 180 இடங்கள் கிடைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் கூறியது தவறு என்றால் முதலமைச்சர் என் மீது வழக்கு தொடரட்டும், நீதிமன்றத்தில் ஆதாரத்தை சமர்பிக்க தயார். மருத்துவ ஆணையத்திடம் இருந்து ரத்து உத்தரவு புதுவை அரசுக்கு வந்து 3 நாட்கள் ஆகிறது.

இதற்கு காரணமான மருத்துவக் கல்லூரி இயக்குனர் உட்பட அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். வவுச்சர் ஊழியர்களை சட்டத்துக்கு புறம்பாக பணி நிரந்தரம் செய்ய முதல்வர் அக்கறை காட்டினார். ஆனால் டாக்டர்கள் நியமனத்தில் அக்கறை காட்டவில்லை. இதனால்தான் தற்போது அரசு மருத்துவக்கல்லூரி அங்கீகாரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது." என்றார்.

இதுபற்றி புதுவை அரசு மருத்துவக்கல்லூரி இயக்குனர் உதயசங்கரிடம் கேட்டதற்கு, "சிசிடிவி 26 கேமிராக்கள் பொருத்துதல், பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு அவசியம் என தேசிய மருத்துவ ஆணையம் அரசு மருத்துவக்கல்லுாரியில் உள்ள சில குறைபாடுகளை சுட்டிக் காட்டியுள்ளது. இந்த குறைகளை களைந்து நிவர்த்தி செய்துள்ளோம். இதற்கான முழு நடவடிக்கை எடுத்து, மீண்டும் அனுமதி பெற ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளோம்." என்று குறிப்பி்ட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x