Published : 25 May 2023 05:08 PM
Last Updated : 25 May 2023 05:08 PM

மயான பூமிகளில் 'சேவைகள் இலவசம்' என்று அறிவிப்பு பலகை வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: மயான பூமிகளில் சேவைகள் இலவசம் என்ற அறிவிப்பு பலகையை கட்டாயம் வைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான 209 மயான பூமிகள் உள்ளன. இந்த மயான பூமிகளில் உடல்களை எரித்தல் மற்றும் புதைத்தல் சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பல இடங்களில் உள்ள மயான பூமிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துகொண்டே உள்ளது. குறிப்பாக, தனியார் பராமரிப்பில் உள்ள மயான பூமிகள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் மயான பூமிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து கொண்டே உள்ளது.

இது தொடர்பாக புகார் அளித்தும் மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மயான பூமிகள் சேவைகள் இலவசமாக வழங்கப்படுவது தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மாநகராட்சி மயான பூமிகளில் சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அதற்குண்டான அறிவிப்புப் பலகைகளை மயான பூமிகளின் வாயிலில் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும் என்று அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிப்பு பலகையில் மயான பூமியின் விவரம் மற்றும் புகார் அளிக்க வேண்டிய அதிகாரிகளின் விவரம் இடம்பெற்று இருக்கும். எனவே, இந்தப் பலகைகளை கண்டிப்பாக வைத்து புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என்று மண்டல அளவிலான அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x