Published : 25 May 2023 01:31 PM
Last Updated : 25 May 2023 01:31 PM

நாடாளுமன்ற திறப்பு விழா புறக்கணிப்பு முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்யவேண்டும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது என்ற முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்க இருக்கிறார். இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. குடியரசுத் தலைவரையும், குடியரசு துணைத் தலைவரையும் மத்திய அரசு புறக்கணித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற, புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா குறித்த செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வில்லை என்ற நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் எடுத்துள்ளனர். புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. அடுத்த 200 ஆண்டுகள் இருக்கக் கூடிய நாட்டின் பெருமையான சின்னம் இது.

தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அங்கு அமர்ந்து தான் மக்களின் பிரச்சனைகளை பேசப் போகிறோம். எனவே இந்த சபையை புறக்கணிக்க வேண்டுமா?. இது ஜனநாயகத்தின் கோவில். பிரதமர் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்த போது சிரம் தாழ்த்தி அந்த கோவிலை வணங்கி விட்டு தான் உள்ளே சென்றார். பிரதமரை பிடிக்கவில்லை உள்ளிட்ட எந்த காரணமாக இருந்தாலும் நிகழ்வில் கலந்து கொள்வது நாம் அந்த கோவிலுக்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதை.

ஜனநாயகத்தில் மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசக் கூடிய அந்த கோவிலில் அமர்ந்து தான் நாம் மக்களுக்கு தேவையான விஷயங்களை கொண்டு வருகிறோம். அதை புறக்கணிப்பது நல்லது இல்லை. நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நான் எதிர்கட்சிகளிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் நிலைப்பாடை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மக்களுக்காகவாது அந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x