சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு

நீதிபதி எஸ்.வைத்தியநாதன்
நீதிபதி எஸ்.வைத்தியநாதன்
Updated on
1 min read

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி.ராஜா நேற்றுடன் ஓய்வுபெற்றார். இதையடுத்து, புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் இன்று (மே 25) முதல் தனது பணிகளை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1962-ம் ஆண்டு ஆக.17-ம்தேதி கோயம்புத்தூரில் பிறந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம்பிள்ளை உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் பி.ஏ.(பொருளாதாரம்) பட்டப் படிப்பையும், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும், தொழிலாளர் நலன், தனிநபர் மேலாண்மை, தொழிலக உறவுகள் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் கடந்த 1986-ம் ஆண்டுவழக்கறிஞராக பதிவு செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். இவரது தாத்தா எல்.எஸ்.வைத்தியநாதன், சென்னைஉயர் நீதிமன்றத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். இவரது தந்தை வி.சுப்பிரமணியன், தொழிற்சங்கத்தில் முக்கிய பங்காற்றியவர். கடந்த 1946-ம்ஆண்டு ‘ஒயிட் காலர் எம்ப்ளாயீஸ் யூனியன்’ தொடங்க ஆணிவேராக செயல்பட்டவர்.மெட்ராஸ் புத்தக ஏஜென்சியின் வெளியீடான தொழிலாளர் சட்டம் தொடர்பான புத்தகங்களின் பதிப்பக ஆசிரியராகவும் இவரது தந்தை இருந்துள்ளார்.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கடந்த 2013-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, கடந்த 2015-ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in