

சென்னை: வேளாண் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கூட்டுறவு, வருவாய் போன்ற 13-க்கும் மேற்பட்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பலன்களை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில் ‘க்ரெயின்ஸ்’ (GRAINS) இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், விவசாயிகளின் தனிப்பட்ட விவரங்களுடன் நில விவரங்களை இணைக்கும் பணியும், நில உடைமை வாரியாக புவியிடக் குறியீடு செய்யும் பணியும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
பயிர் சாகுபடி செயலி மூலம் ஒவ்வொரு பசலியின் அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யப்படும் பயிர் விவரங்கள், நிகழ்நிலை அடிப்படையில் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்யப்படுவதால், சாகுபடி செய்யப்பட்டுள்ள அனைத்து பயிர் விவரங்களும் உரிய முறையில் ஒத்திசைவு செய்யப்பட்டு, இணையதளத்தில் பதிவிடப்படும்.
சேதத்தை கணக்கிடலாம்: வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பயிர் சேதம் அடைந்தால், அதுபற்றிய விவரங்களை சர்வே எண் வாரியாக சரிபார்த்து, பயிர் சேதத்துக்கான நிவாரணத்தொகையை துல்லியமாகக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு விரைவில் வழங்க இயலும்.
எனவே, சாகுபடி செயலி குறித்து வேளாண் துறை அலுவலர்களுக்கு சென்னையில் அண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சி பெற்ற 114 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், வேளாண்மை, தோட்டக்கலை உதவி அலுவலர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள்.
பயிர் சாகுபடி செயலி சோதனை அடிப்படையில் 35 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 110 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும். அப்போது எதிர்கொள்ளும் இடர்பாடுகளை உடனடியாக சரிசெய்து மாநிலத்தின் அனைத்து வருவாய் கிராமங்களிலும் எதிர்வரும் குறுவை பருவம் முதல் இந்த பயிர் சாகுபடி செயலியை முழு செயல்பாட்டுக்கு கொண்டுவர பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால், ‘க்ரெயின்ஸ்’ இணையதளத்தின் பயன்கள் விரைவில் விவசாயிகளுக்கு சென்றடையும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.