Published : 26 Oct 2017 03:28 PM
Last Updated : 26 Oct 2017 03:28 PM

கட்-அவுட் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: வாசன்

தமிழகத்தில் கட்-அவுட் கலாச்சாரம் வரன்முறைப்படுத்தப்பட வேண்டும். இதற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சியின் பேராதரவைப்பெற்று தீர்மானம் நிறைவேற்றி, சட்டம் கொண்டுவந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை உயர் நீதிமன்றம் உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்களுடன் பேனர் மற்றும் கட் அவுட் வைக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் பேனர் மற்றும் கட்-அவுட் வைக்கக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பொதுவாக மறைந்த தலைவர்களின் புகைப்படம் பொறித்த பேனர் மற்றும் கட் -அவுட் வைப்பது அவர்களுக்கு பெருமை சேர்க்கும். எனவே அத்தகைய புகழுக்குரிய தலைவர்களின் புகைப்படம் பொறித்த பேனர் மற்றும் கட்-அவுட்டுகளை பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கக் கூடாது என்பது தமாகாவின் நிலைப்பாடு.

எனவே ஒரு கூட்டமோ, நிகழ்ச்சியோ, விழாவோ நடைபெற்றால் அது நடைபெறும் இடத்தில் மட்டும் மறைந்த தலைவர்களின் புகைப்படம் பொறித்த பேனர் மற்றும் கட்-அவுட் வைக்க அனுமதி அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் அக்கூட்டத்தில் அல்லது நிகழ்ச்சியில் அல்லது விழாவில் கலந்து கொள்பவர்கள் மத்தியிலும், பார்ப்பவர்கள் மத்தியிலும், போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் மரியாதை இருக்கும். இதுதான் வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டான கலாச்சாரமாக இருக்கும்.

எனவே சென்னை உயர் நீதிமன்றம் தற்போது அளித்திருக்கும் உத்தரவு வரவேற்கத்தக்கது என்றாலும் கூட இனி வரும் காலங்களில் மறைந்த தலைவர்களின் புகைப்படம் பொறித்த பேனர் மற்றும் கட்-அவுட்டுகளை கூட்டம் அல்லது நிகழ்ச்சி அல்லது விழா நடைபெறும் இடத்தில் மட்டும்தான் வைக்க வேண்டும் என்பதற்கான உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். இதனை 100 சதவீதம் அனைத்து கட்சிகளும், அமைப்புகளும், சங்கங்களும், பொதுமக்களும் பின்பற்ற வேண்டும்.

எப்படி தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதோ அதே போல பேனர் மற்றும் கட்-அவுட்டுக்கும் கோட்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக மாநிலம் முழுவதும் பேனர் மற்றும் கட் -அவுட்டுக்கு கோட்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சியின் பேராதரவைப்பெற்று தீர்மானம் நிறைவேற்றி, சட்டமாக்கி கோட்பாடுகளை கடைப்பிடிக்க உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு குறுகிய காலக்கெடுவிற்குள் சென்னை உயர் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்து அதனை மாநிலம் முழுவதும் பொதுவாழ்வில் உள்ளவர்கள் 100 சதவீதம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x