Published : 25 Oct 2017 09:47 AM
Last Updated : 25 Oct 2017 09:47 AM

நவம்பர் 1-ம் தேதி முதல் புதிய காலஅட்டவணை: நெல்லை, மதுரை, செங்கோட்டைக்கு புதிய ரயில்கள் - 51 ரயில்களின் வேகம் அதிகரிப்பு; மன்னை எக்ஸ்பிரஸ் தஞ்சாவூர் செல்லாது

வரும் நவ.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள ரயில்வே கால அட்டவணையில் தாம்பரத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டை, குஜராத்துக்கு புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 51 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.

தெற்கு ரயில்வே சார்பில் புதிய ரயில் காலஅட்டவணை வரும் நவ.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த அட்டவணையில் புதிதாக இயக்கப்பட உள்ள ரயில்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, தாம்பரம்-பகத்-கி-கோத்திக்கு (ராஜஸ்தான்) ஹம்சாபர் வாராந்திர விரைவு ரயில், திருநெல்வேலி, செங்கோட்டை இடையே தினசரி அந்தியோதயா விரைவு ரயிலும், திருநெல்வேலி-காந்திதாமுக்கு (குஜராத்) இடையே வாராந்திர ஹம்சாபர் விரைவு ரயிலும் இயக்கப்பட உள்ளன.

இதேபோல், சென்னை சென்ட்ரல்-மதுரை இடையே வாராந்திர ஏசி விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. மேலும், சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு ரயில் கொல்லம் வரை நீட்டிக்கப்படுகிறது. சென்னை எழும்பூர்-மன்னார்குடி மன்னை விரைவு ரயில் தஞ்சை வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக மயிலாடுதுறை, திருவாரூர், நீடாமங்கலம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல்-பழனி விரைவு ரயில் பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்-பாலக்காடு டவுன் அமிர்தா விரைவு ரயில் மதுரை வரை நீட்டிக்கப்படுகிறது.

கும்பகோணம்-தஞ்சாவூர் பயணிகள் ரயில் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்படுகிறது. திருச்செந்தூர்-பழனி பாசஞ்சர் ரயில் பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், 51 விரைவு ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x