

சென்னை: பணி ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாக்கு நேற்று பிரிவுபசார விழா நடைபெற்றது.
கடந்த ஆண்டு செப். 22-ல் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட டி.ராஜா நேற்றுடன் பணி ஓய்வுபெற்றார். அவருக்கு உயர் நீதிமன்றம் சார்பில் பிரிவுபசார விழா நடத்தப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற கலையரங்கில் நடைபெற்ற விழாவில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை வாழ்த்திப் பேசினார்.
பின்னர் நீதிபதி டி.ராஜா பேசியதாவது: மது மற்றும் புகைப்பழக்கத்தின் தீமையை உணர்ந்து, எனது சொந்த ஊரான மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள தேனூரில் தற்போதும் சிகரெட், மதுபானங்கள் விற்கப்படுவதில்லை. இதுபோன்ற கட்டுப்பாடுகள் தற்போது அவசியமான ஒன்றாகும்.
விவசாயிக்கு மகனாகப் பிறந்து, 14 ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 8 மாதங்கள் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பணியில் சேர்ந்தால் ஒரு நாள் ஓய்வும் வரும். எனது பணியை மன நிறைவுடன், முழு திருப்தியாக செய்துள்ளேன்.
இளம் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என எங்கு பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தாலும், அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு உங்களின் ஆங்கிலப் புலமையை கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வெற்றிகரமான வழக்கறிஞர்களாக வலம் வர முடியும்.
நீதிமன்றங்களில் வாதங்களை உன்னிப்பாக கவனித்து, சட்டப் புத்தகங்களை அதிகம் படித்தால், இளம் வழக்கறிஞர்களுக்கு வானமே எல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி.ராஜா, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் அமைக்க உத்தரவிட்டது, மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக தாழ்தளப் பேருந்துகளை அதிகம் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது, கூட்டுறவு சங்கங்களுக்கு 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது என பல்வேறு முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
சொந்த மாநிலத்தில் நீண்டகாலம் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் என்பதும், அதிக எண்ணிக்கையில் புதிய நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.