

சேலையூர்: தாம்பரம் அருகே சேலையூர், கர்ணம் தெரு கிழக்கு பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி (60). இவரது வீடு, 25 ஆண்டுகள் பழமையானது. சாலையை விட தாழ்வாக இருந்ததால் ஜாக்கி மூலம் வீட்டை துாக்கி உயரத்தை அதிகரிக்க லட்சுமி முடிவு செய்து மடிப்பாக்கத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தை அணுகினார்.
தொடர்ந்து, கட்டிடத்தை ஜாக்கி மூலம் தூக்கி உயரத்தை அதிகரிக்க மே 11-ம் தேதி பணி தொடங்கியது. இதில் வட மாநில தொழிலாளர்கள் 11 பேர் அங்கேயே தங்கி பணி மேற்கொண்டு வந்தனர். முதலில், கட்டிடத்தை துளையிட்டு சுற்றி ஜாக்கி பொருத்தும் பணி நடந்தது. தொடர்ந்து, நான்கு நாட்களாக ஜாக்கிகளை கொண்டு கட்டிடத்தை உயர்த்தி, கீழ் பகுதியில் கட்டிடப்பணி நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலை, கட்டிடத்தின் பின்புறத்தை உயர்த்தும் பணியில், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பேஸ்கார் (29), ஓம்கார் (20) உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
காலை, 9:00 மணிக்கு ஜாக்கியை தூக்கியபோது, பின்புறம் இருந்த கான்கிரீட் சீலிங் உடைந்து சரிந்தது. இதில், 3 தொழிலாளர்கள் சிக்கினர். பேஸ்கார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓம்கார் காயமடைந்தார். மற்றொரு தொழிலாளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து மேடவாக்கம், தாம்பரம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து, கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்தவரின் உடலை மீட்டனர். தொடர்ந்து, போலீஸார் உடலை, குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.