

சென்னை: சமூகத்தில் சிறுதொழில் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து உரக்க பேச வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
இணையதள சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் அமைப்பு சார்பில் இந்திய நிறுவனங்களின் எதிர்காலத்துக்கான ஆதாரம் என்ற தலைப்பில் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கனிமொழி எம்.பி. பேசியதாவது: சமூகத்தில் சிறு தொழில் நிறுவனங்கள் குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம். ஆனால் நாம் அனைவரும் கோடி கணக்கில் முதலீடு செய்யும் பெரிய தொழில் நிறுவனங்கள் குறித்து பேசுகிறோம். அவர்களோ தொழில்நுட்பம் வளர, வளர தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கின்றனர். தமிழகத்தை பொருத்தவரை கோடி கணக்கான வேலைவாய்ப்புகளை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களே வழங்கி வருகின்றன.
அந்த நிறுவனங்கள்தான் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் செய்கின்றன. நாட்டில் அதிகளவு சிறு தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அறிந்ததாலேயே சிப்காட், சிட்கோ ஆகியவற்றை மறைந்த முன்னாள் முதல்வர் எனது தந்தை கருணாநிதி தொடங்கினார். அவரை போலவே, சிறு தொழில் நிறுவன பிரதிநிதிகளுக்கு மத்திய, மாநில அரசுகளிடம் ஏராளமான எதிர்பார்ப்புகள் இருப்பதை என்னாலும் புரிந்து கொள்ள முடிகிறது.
குறிப்பாக அவர்களுக்கு வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதில் பிரச்சினை இருக்கிறது. கடன்களை திருப்பி வழங்காத கார்ப்பரேட்டுகளுக்கு கோடி கணக்கில் வழங்கும் வங்கிகள், ரூ.50 லட்சம், ரூ.1 கோடி போன்ற தொகைக்கே கோடி முறை சிந்திப்பதோடு, கடன் தராமல் இருப்பதற்கான வழிகளையே தேடி பிடிக்கின்றன.
இத்துறையின் முக்கியத்துவத்தை பொதுமக்களும் அறிந்து கொள்ளவில்லை. சமூகம், அரசின் வருவாய், வேலைவாய்ப்பு போன்றவற்றில் சிறு தொழில்நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து நாம் பேசுவதில்லை. இதுகுறித்து உரக்க பேச வேண்டும். நிறுவனங்களின் கோரிக்கைகளை நிச்சயம் நாடாளுமன்றத்திலும், தமிழக அரசிடமும் எடுத்துரைத்து, துறையை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கு சிறு தொழில் நிறுவனங்களில் அதிகளவு முதலீடு செய்வதன் மூலம் தீர்வு காணலாம். அனைவரையும் உள்ளடக்கிய நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சிக்கு சிறு தொழில் நிறுவனங்கள் பேருதவி புரியும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறுகையில், “எந்த வித ஆதாரமும் அடிப்படையும் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் விமர்சிக்கிறார். முதல்வரின் வெளிநாடு பயணத்தின்போது கோடி கணக்கில் முதலீடு வருகிறது. இது தெரிந்தும் அரசியல் செய்ய வேண்டும் என்பதால் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு முறையாக நடத்தப்படவில்லை, அதனால் நாங்கள் பங்கேற்கவில்லை” என்றார்.