Last Updated : 08 Oct, 2017 08:20 AM

 

Published : 08 Oct 2017 08:20 AM
Last Updated : 08 Oct 2017 08:20 AM

சிவகாசியில் இறுதிக் கட்ட உற்பத்தி: வெளியூர்களுக்கு பட்டாசு அனுப்பும் பணி மும்முரம்

சிவகாசியில் தீபாவளி பட்டாசு உற்பத்தி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து ஆலைகளிலும் பட்டாசுகளை வெளியூர்களுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 767 பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு நாட்டின் மொத்த தேவையில் சுமார் 90 சதவீத பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி இந்த ஆலைகளில் பட்டாசு உற்பத்தி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இது குறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைவுதான். பட்டாசு தொழிற்சாலைகள் காலவரையற்ற வேலைநிறுத்தம், ஜிஎஸ்டி வரி, வெளி மாநிலங்களில் பட்டாசு வெடிக்க நீடித்த தடை உட்பட பல்வேறு காரணங்களால் பட்டாசு உற்பத்தி, விற்பனை பெருமளவு சரிந்தது. வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் தடை விதித்ததால் அங்குள்ள வியாபாரிகளிடம் இருந்து ஆர்டர்கள் கிடைக்கவில்லை. இதனால் பட்டாசு உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அண்மையில் ஆர்டர்கள் குவிந்தன. இருப்பினும் தேவைக்கேற்ப பட்டாசுகளை உற்பத்தி செய்து அனுப்பி வைக்க முடியவில்லை.

பட்டாசு உற்பத்தி அடுத்த வாரம் முடிக்கப்பட்டு அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் விடுமுறை விடப்படும். எனவே பட்டாசு உற்பத்தி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி கூறியதாவது:

சீனப் பட்டாசுகளின் அச்சுறுத்தல் இந்த ஆண்டும் உள்ளது. வட மாநிலங்களில் இறுதிக்கட்ட விற்பனையின்போதே சீனப் பட்டாசுகளின் ஆதிக்கம் தெரிய வரும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டியால் பட்டாசுத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு தொழில்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டபோதும் பட்டாசுக்கான வரி குறைக்கப்படாதது வேதனை அளிக்கிறது. பட்டாசுத் தொழில் நலிவடையும் சூழ்நிலையால் அதை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி வருகிறது.

மற்ற நாடுகளைப் போல சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசுகளையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் உலக சந்தையில் சிவகாசி பட்டாசு தனி இடத்தைப் பெறும். உற்பத்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்டுதோறும் தொடர்ந்து பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்படும் என்பதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x