

விருதுநகரில் மதிமுக நிர்வாகி களுடன் ஆய்வுக்களம் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் அளித்த பேட்டி:
ஆய்வுக்களம் என்ற இந்த நிகழ்ச்சி, திருநெல்வேலி புறநகர் மற்றும் மாநகர் மாவட்டங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன்பின், விருதுநகரில் நடை பெற்ற ஆய்வுக்கள நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தேர்தல் தோல்விக்குப் பின்ன ரும் அதுகுறித்து கவலையோ, கலக்கமோ இல்லாமல் தொடர்ந்து 20 ஆண்டுகளாக மதிமுகவை கட்டிக்காத்து வருகிறோம். கட்சியை வலுப்படுத்தும் பணியை யும் தீவிரப்படுத்தி உள்ளோம்.
மக்களவைத் தேர்தலில் வெள்ளமாக பாய்ந்த பணத்தையும் மீறி மதிமுக 2.61 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. நாம் பெற்ற ஒவ்வொரு வாக்கும் விலை மதிப்பற்றது.
மதிமுக தோற்றுப்போனதே என்று பலரும் கட்சி எல்லைகளைக் கடந்து கவலைப்படுகின்றனர். கொள்கைகளுக்கு என்றுமே தோல்வி இல்லை. மதிமுக என்பதே போராட்டத்தின் அடையாளம், நம்பிக்கையின் அடையாளம். ஆகவே தொடர்ந்து கட்சிப் பணிகளை வேகமாக முன்னெ டுத்துச் செல்ல இந்த ஆய்வுப் பணி உதவும். அவர்கள் செலவு செய்ததில் நூறில் ஒரு பங்குகூட நாங்கள் செலவு செய்யவில்லை.
ஒரு அரசு இயங்கும்போது பாராட்ட வேண்டியதைப் பாராட்டு வோம். தவறு என்றால் அதை சுட்டிக்காட்டுவோம். கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித் திருக்கிறோம். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலைகள் உயர்த்தப்படுவதும் பொதுமக்களை கடுமையாகப் பாதிக்கும்.
மிகுந்த நம்பிக்கையோடு நரேந்திர மோடி அரசுக்கு நாடு முழுவதும் பெரும் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். மோடி தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை முன்னெடுத்துள்ளார். கடும் சோதனைகளுக்கு ஆளாகும் விதத்தில் முந்தைய அரசு பல தவறுகளைச் செய்துவிட்டுப் போயிருக்கிறது. அதிலிருந்து தேசத்தை மீட்க வேண்டிய பெரும் பொறுப்பு மோடிக்கு உள்ளது. எனவே அவர் கவனத்தோடும், எச்சரிக்கையோடும் செயல்பட்டு வருகிறார் என்றார் வைகோ.