

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் உடல் நேற்று தத்தனேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதுரையின் பிரபல தொழிலதிபரும், மீனாட்சி அம்மன்கோயில் தக்காருமான கருமுத்து தி.கண்ணன் (70) உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் கோச்சடையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இதையடுத்து மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்பி, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல்தியாகராஜன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி. உதயகுமார் மற்றும் உள்ளூர் எம்எல்.ஏக்கள் உட்பட பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக கருமுத்து தி.கண்ணன் மறைவுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்த இரங்கல் செய்தியில்: மதுரை கருமுத்து தி.கண்ணன் காலமான செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். கல்விக்குத் தொண் டாற்றிய அவருடைய தந்தை கருமுத்து தியாகராசன், தாய் ராதா தியாகராசன் ஆகியோர் நிறுவிய பல்வேறு கல்லூரி களைத் தொடர்ந்து நடத்தி கல்வி வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றினார்.
மதுரை மீனாட்சி கோயிலின் தக்காராகத் திகழ்ந்து பக்தர்களுக்குப் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்தார். தொழிற் துறையிலும் சிறந்து விளங்கினார். அவருடைய மறைவின் மூலம் வருந்தும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்: நண்பர், மூத்தவர் கருமுத்து தி.கண்ணன் மறைந்துவிட்டார். தொழில், கல்வி, ஆன்மீகம் என பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர். ஆகச்சிறந்த புரவலராக மதுரை மக்களின் மனங்களை வென்றவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாஃபே நிறுவன தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசன்: தொலை நோக்கு பார்வை கொண்டவர் கருமுத்து தி.கண்ணன். அனைவ ராலும் மதிக்கப்படும் தொழிலதிபர், கொடையாளர் மற்றும் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் தக்கார் என பல்வேறு பரிமாணங்களை கொண்ட கருமுத்து தி.கண்ணன், உயிர்நீத்த போதிலும் என்றும் நிலைக்கத்தக்க நேர்த்தியான பாரம்பரியத்தையும், சமூகத்துக்கு மிகச்சிறந்த பங்களிப்பையும் அவர் அளித்துள்ளார்.
இலக்கியத்தின் பெரும் ஆர்வலராகவும், தமிழ் சமூகத்தின் காவலராகவும், தமிழ் கலாச்சாரத்தை பேணுவதில் அவர் எடுத்த முயற்சிகள் சமூகத்தின் மீது என்றும் அழியாத முத்திரையை பதித்திருக்கிறது. அவரது விவேகமான நடைமுறையும், யதார்த்தமான ஆலோசனைகளும் எப்போதும் அன்புடன் நினைவு கூரத்தக்கவை.
இறுதி ஊர்வலம்: நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் 2.50 மணியளவில் மதுரை கோச்சடையில் உள்ள வீட்டிலிருந்து அலங்கார வாகனத்தில் கருமுத்து தி.கண்ணன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பிற்பகல் 3.15 மணியளவில் தத்தனேரி மயானத்தை அடைந்ததும் அங்கு வைகோ, சு.வெங்கடேசன் எம்பி உட்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் நகரத்தார் முறைப்படி இறுதிச்சடங்குகள் நடந்தன. அவரது மகன் ஹரி தியாகராசன் தந்தைக்கு இறுதிச் சடங்குகள் செய்தார். பின்னர் அவரது உடல் எரியூட்டப்பட்டது.