சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் முதலீட்டிற்கு உகந்த சூழ்நிலை பிரகாசமாக இருக்கிறது: சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு 

Published on

சிங்கப்பூர்: "தமிழ்நாட்டில் முதலீட்டிற்கு உகந்த சூழ்நிலை மிக பிரகாசமாக இருக்கிறது. வளர்ந்த நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்து வரும் நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருகின்றன. இத்துறைகளில், முதலீடுகளை வரவேற்கிறோம்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: "சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரன் சென்னை வந்தபோது, என்னைச் சந்தித்தார். அவரது பண்பினால் மகிழ்ந்து போன நான், அடுத்த பயணமாக சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டேன். அவர் என்னைச் சந்தித்தபோது தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் இடையிலான பொருளாதார உறவுகள், பண்பாடு மற்றும் வர்த்தகம் பற்றி மிக விரிவாகப் பேசினோம்.

தமிழ்நாட்டின் முக்கிய முதலீட்டாளர்களில் சிங்கப்பூரும் ஒன்று என்பதை, நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 சிங்கப்பூர் நிறுவனங்கள் உள்ளன. அசெண்டாஸ் நிறுவனம், தரமணியில் ஒரு மிகப் பெரும் IT Park-ஐ நிறுவியுள்ளது. டமாசெக், DBS வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் MAPLE TREE போன்ற பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வணிகம் புரிந்து வருகின்றன. சிங்கப்பூரை மையமாகக் கொண்ட நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். கடந்த இரண்டு வருடங்களில், தமிழ்நாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தி, இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இதன்மூலம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 4 லட்சத்து 12 ஆயிரத்து 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் முதலீட்டில் 4 சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்மூலம் 6 ஆயிரத்து 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் பல திட்டங்களுக்கு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், பல்வேறு வகைப்பட்ட நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதுதான்.

மின் வாகனங்களுக்கான Charging stations போன்ற புதிய துறைகளிலும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எங்கள் மாநிலத்தின் சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதிசெய்யும் விதமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இந்தத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

நாங்கள் ஒவ்வொரு துறையையும் நன்கு ஆராய்ந்து, அத்துறைகள் சார்ந்து முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு, அவர்கள் தேவைகளைக் கண்டறிந்து நிறைவு செய்திடும் வகையில், பல்வேறு துறைகளுக்கான கொள்கைகளை வெளியிடுகிறோம்.விண்வெளி, பாதுகாப்பு, தோல், ஜவுளிக் கொள்கைள் என பல கொள்கைகளை வெளியிட்டு இருக்கிறோம். எங்கள் மாநிலத்தில் Fintech city அமைப்பது போன்ற திட்டங்களைச் செயல்படுத்திட, உங்களின் இந்த ஆற்றலும், அனுபவமும் எங்களுக்கு மிகவும் தேவை.

அதேசமயம் உங்களது வர்த்தக வரம்புகளும் விரிந்து பரவும்; பெருகும். தொழில் பூங்காக்கள் மேம்பாடு, தொழில் நகரியங்கள், தொழில் பெருவழித் தடங்கள், துறைமுகங்களை மேம்படுத்துதல், நகர்ப்புற உள்கட்டமைப்பு, கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, கடல்நீரை நன்னீராக்கும் திட்டம், சுற்றுலா தொடர்பான திட்டங்கள் ஆகியவற்றில், சிங்கப்பூரின் ஒத்துழைப்பு தமிழ்நாட்டிற்கு மிக அவசியம் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். எங்களது முன்னேற்றப் பயணத்தில் இணைந்து, அதற்கான திட்டங்களை செயல்படுத்த சிறப்பான பங்குதாரராக சிங்கப்பூர் கைகோத்திட வேண்டும்.

இப்போது தமிழ்நாட்டில் முதலீட்டிற்கு உகந்த சூழ்நிலை மிக பிரகாசமாக இருக்கிறது. வளர்ந்த நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்து வரும் நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருகின்றன. இத்துறைகளில், உங்களின் மேலான முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம். இன்றைய தினம், சிப்காட் மற்றும் சிங்கப்பூர் இந்தியா கூட்டுத் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது.

இதன்மூலம், தரமான உள்கட்டமைப்புக்கான கொள்கைகள் மற்றும் அளவுகோல்களை உருவாக்குதல், சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்துதல், கழிவு நீர் மேலாண்மை, மலிவு விலையில் இல்லங்கள், உள்கட்டமைப்பு அமைப்பதற்கான நிதி வசதி, பசுமை மயமாக்கல் மற்றும் பசுமைக் கட்டடங்கள் போன்றவற்றை மேம்படுத்தி, அதன்மூலம், தொழில் பூங்காக்களின் தரத்தினை வெகுவாக மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்று பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in