Published : 24 May 2023 05:58 PM
Last Updated : 24 May 2023 05:58 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், பத்திர பதிவுத்துறை ஐஜியாகவும், இங்கு கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய தீபக் ஜேக்கப்பை, தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியராக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில் இன்று காலை புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்ற தீபக் ஜேக்கப்பிடம், தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், ஆவணங்களை கையெழுத்திட்டு ஒப்படைத்து, வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள தீபக் ஜேக்கப் சொந்த ஊர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டமாகும். பி.டெக் படித்துள்ள இவர், 2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று, தஞ்சாவூரில் உதவி ஆட்சியராவும், 2016-2017-ல் தூத்துக்குடியில், உதவி ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனராகவும், தேர்தல் ஆணையத்தில் இணை முதன்மை அலுவலராகவும், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனராகவும் இவர் பணியாற்றியுள்ளார். தற்போது தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த இவர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து, தற்போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் செய்தியாளர்களிடம் கூறியது, "மக்களின் கோரிக்கைகளை அறிந்து, அதனை நிறைவேற்ற, அனைத்து அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று அந்த பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மதுபானம் குடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸாரிடம் தகவல் கேட்டுள்ளேன். அவர்கள் அறிக்கை வழங்கிய பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த 2014-15ஆண்டில் தஞ்சாவூரில் உதவி ஆட்சியராக பயிற்சியில் இருந்தேன். தற்போது நான் மீண்டும் எனது சொந்த வீட்டிற்கு வந்ததாக நினைக்கிறேன். விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால், விவசாயிகளின் கோரிக்கை, நீர்ப்பாசனம், போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்று, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாலை நேரத்தில் பார்வையாளர்கள் சந்திப்பு நேரங்களில் அனைவரும் என்னை சந்திக்கலாம்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஏற்கனவே பலமுறை நான் வந்துள்ளேன். சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அந்த மருத்துவக் கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மணல் கடத்தல் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரியுடன் ஆலோசனை நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், ஆட்சியர் அலுவலகத்திற்கு காரில் வந்தார். அப்போது, அவருடன் டபேதார், உடன் வந்த போது, நீங்கள் இங்கேயே நின்று புதிய மாவட்ட ஆட்சியரை அழைத்து வாருங்கள் எனக் கூறிவிட்டு, தனது அறைக்கு தனியாகச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT