Published : 24 May 2023 03:19 PM
Last Updated : 24 May 2023 03:19 PM

1975-ல் நாடாளுமன்ற இணைப்புக் கட்டிடத்தை திறந்து வைத்தவர் இந்திரா காந்தி; குடியரசுத் தலைவர் அல்ல: தமிழக பாஜக விளக்கம் 

நாராயணன் திருப்பதி | கோப்புப் படம்.

சென்னை: 1975 ம் ஆண்டு நாடாளுமன்ற அனெக்சர் கட்டிடத்தை திறந்து வைத்தவர் இந்திரா காந்திதானே தவிர அன்றைய குடியரசு தலைவர் அல்ல என்று தமிழக பாஜக விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து இன்று தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கலாமா? அது முறையா? குடியரசுத்தலைவர் தானே திறந்து வைக்க வேண்டும் என்று புலம்பிக்கொண்டிருக்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளுக்கும் தலைவர் குடியரசுத் தலைவரே என்றும், நாடாளுமன்ற அவைகளின் கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர் குடியரசுத் தலைவரே என்றும் பழங்குடியினத்தவர் என்பதால் தான் ஒதுக்கிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள் என்று மலிவான அரசியலை முன் வைத்து, இது வரை யாருக்கும் தெரியாத ஒன்றை தெரிவிப்பது போல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

1975 ம் ஆண்டு நாடாளுமன்ற இணைப்புக் கட்டிடத்தை (Annexe) திறந்து வைத்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தானேயன்றி, அன்றைய குடியரசு தலைவர் பக்ருதீன் அலி அகமது அல்ல. இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் பக்ருதீன் அலி அகமது அவர்களை ஒதுக்கி, அவமானப்படுத்தியதா காங்கிரஸ்? 1987 ம் ஆண்டு பாராளுமன்ற நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியது அன்றைய பிரதமர் ராஜிவ் காந்திதானேயன்றி, அன்றைய குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அல்ல. தமிழர் என்பதால் தான் ஆர்.வெங்கடராமனை ஒதுக்கியதா காங்கிரஸ்?

கடந்த தி மு க ஆட்சியில், மார்ச் 13, 2010 ம் ஆண்டு ஓமந்தூரார் மாளிகையில் புதிய தமிழக சட்டசபை கட்டிடத்தை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் திறந்து வைத்தார் என்பதை நினைவில் கொள்ளவும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறக்க வேண்டுமென்றால், புதிய சட்டசபை கட்டிடத்தை, சட்ட மன்றத்தின் தலைவர் அன்றைய ஆளுநர் அல்லது குடியரசு தலைவர் தானே திறந்திருக்க வேண்டும்? பிரதமரும், காங்கிரஸ் கட்சி தலைவரும் எதற்கு அழைக்கப்பட்டார்கள்? அன்று ஒரு பெண் குடியரசுத் தலைவரையும், சீக்கிய சமுதாயத்தை சேர்ந்த ஆளுநரையும் அவமானப்படுத்தியது ஏன் என்று திமுக விளக்குமா?

தெலுங்கானாவில் புதிய சட்டசபை மற்றும் புதிய தலைமை செயலகத்தை அந்த மாநிலத்தின் முதல்வரே திறந்து வைத்ததோடு, அரசியலமைப்பு சட்டப்படி அம்மாநிலத்தின் தலைவரான ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அழைக்கப்படவில்லை. அப்போது வாய் மூடி மௌனம் காத்தவர்கள், இப்போது நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறக்கிறார் எனும் போது மூடிய வாயை திறந்து ஓலமிடுவது ஏன்? ஒரு பெண், அதிலும் ஒரு தமிழர் என்பதால் தான் டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜனை ஒதுக்கி, அவமானப்படுத்தியதா அம்மாநில அரசு என்று எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்காதது ஏன்?

எது நடைமுறையோ அதை முறையே செய்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி அரசு. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கேலி பேசிய எதிர்க்கட்சிகள், குறை சொன்ன எதிர்க்கட்சியினர், பிரதமருக்கு புதிய இல்லம் கட்டுகிறார் என்று கதை விட்டுக் கொண்டிருந்த மலிவான அரசியல்வாதிகள் இன்று பொழுது போகாமல் பொங்கியெழுந்து அரசியலமைப்பு சட்டம் குறித்து நமக்கு பாடம் எடுப்பது விந்தையிலும் விந்தை. தங்களுக்கொரு நியாயம், மற்றவர்களுக்கு அநியாயம் என்ற அக்கப்போர் அரசியலை கைவிட்டு ஆக்க பூர்வ அரசியலை முன்னெடுப்பதே எதிர்க்கட்சிகளுக்கு சிறப்பை தரும்.'' இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x