Published : 24 May 2023 06:25 AM
Last Updated : 24 May 2023 06:25 AM
மயிலாடுதுறை: சீர்காழியில் இன்று குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள சட்டைநாதர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் இன்று (மே 24) காலை குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை சட்டைநாதர் கோயிலில் தரிசனம் செய்தார். கிழக்கு கோபுர வாயில் வழியாக வந்த ஆளுநருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, எஸ்.பி நிஷா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆளுநரை வரவேற்று, கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.
அதன்பின், கோயில் பிரகாரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, நடராஜர் சிலைக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினார். இதில், சுமார் 5 ஆயிரம் பேர் பரத நாட்டியம் ஆடினர்.
பின்னர் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட சுவாமி சந்நதிகளில் தரிசனம் செய்த ஆளுநர், யாகசாலையில் வழிபாடு செய்தார். தொடர்ந்து, கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சிலைகளை அவர் பார்வையிட்டார்.
ஆளுநர் வருகையை முன்னிட்டு ஐஜி கார்த்திகேயன், டிஐஜி ஜெயச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு எதிராக சீர்காழி அருகேயுள்ள அரசூர் ரவுண்டானா பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் அறிவழகன் தலைமையில் கருப்புக் கொடி காட்டிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆளுநருக்கு எதிராகவும் புத்தூர் பகுதியில் கருப்புக் கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT