Published : 24 May 2023 06:14 AM
Last Updated : 24 May 2023 06:14 AM
சென்னை: மோட்டார் வாகன சட்டத்தை மீறியதாக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், திமுக பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனிக்கு சென்னை போக்குவரத்து போலீஸார் ரூ.2,500 அபராதம் விதித்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு அரசு இலச்சினை (லோகோ) பொருத்தப்பட்ட வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று சென்றுள்ளது.
அந்த காரில், விதிகளை மீறி மிக அடர்த்தியாக கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, பம்பரும் பொருத்தப்பட்டு இருந்தது. வாகனத்தின் பதிவு எண் பலகை சரியாக இல்லை. இதுகுறித்து போக்குவரத்து போலீஸாரின் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் புகார் பதிவு செய்திருந்தார்.
இது தொடர்பாக ஆய்வு செய்த போலீஸார், விதிமீறல் நடந்திருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, போக்குவரத்து சட்ட விதிகளை மீறியதாக அந்த சொகுசு காருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக ரூ.500, பம்பர் பொருத்தியதற்காக ரூ.500, பதிவு எண் பலகை முறையாக இல்லாததால் ரூ.1,500 என மொத்தம் ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தில் இந்த அபராதத்துக்கான சலான் பதிவிடப்பட்டது.
இதற்கிடையே, விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ள சொகுசு கார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு சொந்தமானது என்றும், அரசுப் பதவியில் இருப்பதால் தனது காரில் தமிழ்நாடு அரசு இலச்சினையை பொருத்தியுள்ளார் என்றும் போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.
ஐபிஎஸ் அதிகாரிகள், நடிகர்கள் என விதிமீறலில் ஈடுபட்ட பல தரப்பினருக்கும் அடுத்தடுத்து அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT