

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று 66 இடங்களில் பாஜக மாவட்டச் செயற்குழு கூட்டங்கள் நடைபெற்றன. பாஜகவின் மாநிலச் செயற்குழு கூட்டம் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மே 19-ம் தேதி கோவையில் நடைபெற்றது. இதையடுத்து மாவட்ட வாரியாக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் 66 இடங்களில் பாஜகவின் மாவட்டச் செயற்குழு கூட்டங்கள் நேற்று நடைபெற்றன.
இந்த கூட்டங்கள், மாவட்டத் தலைவர்கள், சார்பு அணிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் தலைமையில் நடந்தது. இதில் கட்சியின் தலைமை நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்கள் களப்பணியை தீவிரப்படுத்துவது குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை தொண்டர்களுக்கு வழங்கினர்.
குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தலையொட்டிய கள நிலவரம், கருத்துகள், முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் போன்றவை விவாதிக்கப்பட்டன. மேலும், மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டதைபோல ஜூன் மாதம் முழுவதும் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்லுதல், கள்ளச்சாராயம், மது விற்பனைக்கு கண்டனம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இத்துடன் அந்தந்த மாவட்ட பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோல் சென்னையில் நடைபெற்ற கூட்டங்களில், மாநில செயலாளர் பிரமிளா சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செயற்குழு கூட்டம் குறித்து பாஜக வட்டாரத்தினர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் பாஜக கள அளவில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக பாஜக முன்வைக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இத்தகைய செயல்பாடுகள் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை வெல்வதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். மேலும், திமுகவுக்கு எதிராக தொடர் போராட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம். இதுபோன்ற தொடர் கூட்டங்கள் மூலம் கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடரும்” என்றனர்.