இடிபாடுகளை தன் மீது தாங்கி என் உயிரை காப்பாற்றிய தந்தை: உயிர் பிழைத்த மகன் கண்ணீர் பேட்டி

இடிபாடுகளை தன் மீது தாங்கி என் உயிரை காப்பாற்றிய தந்தை: உயிர் பிழைத்த மகன் கண்ணீர் பேட்டி
Updated on
1 min read

சுவர் இடிந்து விழுந்த போது அப்பா தன்னுடைய உயிரை கொடுத்து, என் உயிரை காப்பாற்றியுள்ளார் என ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மகன் கண்ணீர் மல்க உருக்கமாக தெரிவித்தார்.

செங்குன்றம் அருகே உப்பர பாளையத்தில் தனியார் கிடங்கு சுவர் இடிந்து விழுந்ததில் ஆண், பெண் தொழிலாளர், ஒரு குழந்தை உள்பட 11 பேர் பலியாகினர். இடிபாட்டில் சிக்கி தவித்த நாகராஜ் (19) என்பவரை போலீஸார் மீட்டனர். அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து போது, அவரது உடலில் எந்த இடத்திலும் சிறிய காயங்கள்கூட இல்லை.

அவரை எப்போது வேண்டுமானாலும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் என உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் நாகராஜன் கூறியதாவது:

என்னுடைய தந்தை கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். நான் சித்தாளாக வேலை பார்த்து வந்தேன். சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தோம். எனது அருகிலேயே, அப்பா படுத்து இருந்தார். அப்போது பலத்த மழை பெய்துக் கொண்டு இருந்தது. திடீரென்று வீட்டின் சுவர் இடிந்து விழத் தொடங்கியது.

இதைப் பார்த்த அப்பா, என் மீது சுவர் விழாமல் இருக்க என்னை கட்டிப்பிடித்து பாதுகாத்தார். அப்படியே சுவர் அவர் மீது விழத் தொடங்கியது. சற்று நேரத்தில் நான் மயங்கிவிட்டேன். அதிகாலை யில் வீட்டிற்குள் ஓடிய மழை நீரை கையால் எடுத்து குடித்துக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் மீட்பு குழுவினர் வந்தனர். அவர்களை பார்த்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கத்தினேன். அவர்கள் ஓடி வந்து என் மேல் படுத்து இருந்த அப்பாவை தூக்கி என்னை காப்பாற்றினர். ஆனால், அப்பா மயக்க நிலையிலேயே இறந்துவிட்டார். அதன்பின், என்னை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். எனக்கு உடலில் எவ்விதமான காயமும் இல்லை. என்னுடைய அப்பா உயிரை கொடுத்து, என் உயிரை காப்பாற்றியுள்ளார் என கண்ணீர் விட்டு அழுதார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in