

திருநெல்வேலி: பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான கேலரி மேற்கூரை விழுந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக அதிமுக மாவட்டச் செயலாளர் கணேச ராஜா தலைமையில் அக் கட்சியினர் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ண மூர்த்தி யிடம் அளித்த மனு: பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் பயன்பாட்டுக்கு வந்த சில மாதங்களிலேயே விழுந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும்போது அரசு அதிகாரிகள் உரிய கண்காணிப்பை மேற்கொள்வதில்லை. தரமான பொருட்களை பயன்படுத்தாமல் அரசை ஏமாற்றும் மற்றும் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய பணிகளை மேற் கொண்டுள்ளனர். இது சட்டப்படி குற்றமாகும்.
இதற்கு காரணமானவர்களிடம் இருந்து நஷ்ட தொகையை வசூல் செய்ய வேண்டும். வ.உ.சி. மைதான த்தில் தற்போது எஞ்சியுள்ள கூரைகளின் தரத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். கூரைகள் விழுந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் மற்றும் அரசு பொறியாளர்கள் மீது குற்ற நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் க. ஸ்ரீராம் வெளியிட்ட அறிக்கை: மாவட்ட நிர்வாகம் இச் சம்பவம் குறித்து உடனடியாக விசார ணைக்கு உத்தரவிட வேண்டும். இதற்கு பொறுப்பான அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
புதிதாக திருநெல்வேலி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள, கட்டி வருகின்ற பாளையங்கோட்டை பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், சந்திப்பு பேருந்து நிலையம் ஆகிய வற்றை ஆய்வுக்கு உட்படுத்தி மக்களின் அச்சத்தை போக்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.