

சிவகங்கை: ஆளும்கட்சியினர் நெருக்கடியால் சிவகங்கை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதில் தொடரும் இழுபறி நீடித்து வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 9 வட்டங்களில் காலியாக உள்ள 57 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு அக்டோபரில் அந்தந்த வட்டாட்சியர்கள் மூலம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. விண்ணப்பங்கள் நவ.7-ம் தேதி வரை பெறப்பட்டன. மொத்தம் 57 காலிப்பணியிடங்களுக்கு 4,048 பேர் விண்ணப்பித்தனர். இதில் 3,033 பேரது விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. அப்போதே பலரது விண்ணப்பங்கள் காரணம் கூறாமல் நிராகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
அதைத் தொடர்ந்து டிச.4-ம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 2,025 பேர் தேர்வு எழுதினர். அதில் தேர்வானவர்களுக்கு நடப்பாண்டு ஜனவரியில் நேர்காணல் நடத்தப்பட்டது. இதனிடையே ஆளும்கட்சியினர் தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்க வேண்டுமென நெருக்கடி கொடுத்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து பணியிடங்களை நிரப்பாமல் அப்போதைய மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கிடப்பில் போட்டார். ஆனால் மற்ற மாவட்டங்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இழுபறி நீடித்து வருகிறது.
தற்போது ஜமாபந்தி தொடங்கிய நிலையில், கிராம உதவியாளர் இல்லாத வருவாய் கிராமங்களில் கிராம கணக்குகளை தாக்கல் செய்வதில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.