Published : 08 Oct 2017 08:53 AM
Last Updated : 08 Oct 2017 08:53 AM

வருமானவரி கணக்கு தாக்கல்களை மின்னணு மூலம் ஆய்வு செய்ய முடிவு: காலதாமதம் தவிர்க்க நடவடிக்கை

வருமான வரித்துறையில் நிலுவையில் உள்ள கணக்குத் தாக்கல்கள் மின்னணு நடவடிக்கை மூலம் ஆய்வு செய்யப்படும். இதன்மூலம் வரி செலுத்துவோர் அடிக்கடி வருமான வரி அலுவலகத்துக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது என வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வருமானவரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வருமானவரி செலுத்துபவர்கள் தாக்கல் செய்யும் கணக்கு விவரங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வருமானவரித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வருமானவரி செலுத்துபவர்களில் பெரும்பாலானோர் தாக்கல் செய்யும் கணக்குகளில் வரையறுக்கப்பட்ட மறுஆய்வு செய்யப்படுகின்றன. இந்தக் கணக்குகளின் மறுஆய்வின்போது வரி செலுத்துவோரிடம் விளக்கம் கேட்கப்படும்போது ஏற்படும் காலதாமதம் மற்றும் அவர்கள் வருமானவரித்துறை அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து செல்ல வேண்டிய அவசியம் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படுகின்றன.

இவற்றைத் தவிர்க்கும் வகையில் மின்னணு நடவடிக்கை என்ற புதிய நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, 2017-18ம் நிதியாண்டில் டிசம்பர் 31, 2017 அன்று காலாவதி ஆகிய ஆய்வுக்கு உட்பட்ட வரி மதிப்பீடுகளை இந்த மின்ஆளுகைத் தளத்தைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய நேரடி வரி வாரியம் முடிவு செய்துள்ளது.

2017-ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி வரை முடிக்கப்படாது நிலுவையில் உள்ள காலாவதியாகிற வரி மதிப்பீட்டுக்கு உட்பட்ட கோப்புகள் மீதான மதிப்பீடு நடவடிக்கைகள் மின்னணு நடவடிக்கை மூலமே நிறைவு செய்யப்படும். இதுதொடர்பாக வரி செலுத்துவோருக்கு தனித்தனியே தகவல் தெரிவிக்கப்படும்.

வருமானவரி முதன்மை ஆணையரின் தலைமை அலுவலகம் இயங்கும் பகுதியில் உள்ள மதிப்பீட்டு அதிகாரிகளிடம் நிலுவையில் உள்ள வரையறைக்கு உட்பட்ட மீளாய்வு கோப்புகள் தொடர்பாக வரி செலுத்துவோர் தங்களது விருப்பத்தை தேர்வு செய்து வரும் 15-ம் தேதிக்குள் தங்களது சம்மதத்தைத் தெரிவிக்கலாம். இந்த நடவடிக்கை மூலம் வரி செலுத்துவோர் வருமான வரி அலுவலகத்துக்கு வரவேண்டிய அவசியம் இல்லை.

இணையதளத்தில்..

மேலும், வருமானவரித்துறையின் மின்னணு மூலம் தாக்கல் செய்யும் இணையதளத்தில் இதுவரை கணக்கு வைத்துக் கொள்ளாத வரி செலுத்துவோர் www.incometaxindiafiling.gov.in என்ற இணைதள முகவரியில் உள்ள எளிய வழிகாட்டுதல்களை பின்பற்றி பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x