“கலை, மொழி வளர்ச்சிக்கு தொண்டு புரிந்தவர் கருமுத்து கண்ணன்” - கனிமொழி புகழஞ்சலி

“கலை, மொழி வளர்ச்சிக்கு தொண்டு புரிந்தவர் கருமுத்து கண்ணன்” - கனிமொழி புகழஞ்சலி
Updated on
1 min read

மதுரை: ''கலை, மொழி வளர்ச்சிக்கு தொடர்ந்து தொண்டு புரிந்தவர் கருமுத்து கண்ணன்'' என்று த்துக்குடி கனிமொழி எம்.பி. புகழஞ்சலி செலுத்தினார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காரும், தியாகராசர் பொறியியல் கல்லூரி தாளாளருமான கருமுத்து தி.கண்ணன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். கருமுத்து கண்ணனின் மகன் ஹரி.தியாகராசனிடம் ஆறுதல் கூறினர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய தூத்துக்குடி எம்,பி கனிமொழி கூறுகையில், ''அனைவரின் அன்பைப் பெற்றவர். அவரது மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. தலைவர் கலைஞர், முதல்வர் ஸ்டாலினிடம் மிகவும் நெருக்கம் வைத்திருந்தார். மதுரை மக்களுக்கு இழப்பு. கலை, மொழி வளர்ச்சிக்கு தொடர்ந்து தொண்டு செய்தவர். அவரது குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவிக்கிறேன்'' என்றார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறும்போது, ''மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் பெருமையை யுனஸ்கோ கொண்டு சென்ற பெருமை கருமுத்து கண்ணனை சேரும். மதுரைக்கு ஸ்மார்ட் திட்டம் கிடைக்க, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசி ஆலோசனைகளை தெரிவித்தவர். இத்திட்டம் மீனாட்சி கோயிலை சுற்றிலும் சுத்தமாக வைத்து,பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தினார்'' என்றார்.

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், ''சிறந்த கல்வியாளரை இழந்து இருக்கிறோம். அவர் தனது பொறியியல், கலை , அறிவியல் கல்லூரிகளை தொலைநோக்கு பார்வையில் நடத்தினார். சிறந்த ஆலோசகர். கல்வி உள்ளிட்ட பல்வேறு நிலையில் அவரது பங்களிப்பு அதிகம். அவரது உயிரிழப்பு என்பது மதுரை மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கே இழப்பு'' என்றார்.

தியாகராசர் கல்லூரி முன்னாள் முதல்வர் அருணகிரி கூறும்போது, ''சிறந்த கல்வியாளர், தொழிலதிபர், நன்கொடையாளராக இருந்தார். பல்வேறு கோயிலுக்கு நன்கொடைகளை வாரி வழங்கியவர். துவரிமானிலுள்ள பழமையான கோயிலை சீரமைத்து குடமுழுக்கு செய்தார். இது போன்ற பல்வேறு கோயிலுக்கும் குடமுழுக்கு செய்வதற்கு உதவினார். ஆனாலும், எதையும் விளம்பரம் செய்து கொள்ளாதவர். குறிப்பாக ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவார். தங்களது கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஏழை மாணவர்கள் சாதனை புரிந்தால் அவர்களை ஊக்கப்படுத்துவார்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in