

சென்னை: கோடை வெயில் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் மருந்துகள், உப்பு சர்க்கரை கரைசலை இருப்பில் வைக்க வேண்டும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோடை வெயில் தாக்கத்தால் சின்னம்மை, நீர்ச்சத்து இழப்பு, சரும நோய்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்களும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடை வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கையாளுவதற்கான விரிவான செயல்திட்டத்தை மாவட்டந்தோறும் வகுக்குமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் போதிய அளவு மருந்துகள், உப்பு சர்க்கரை கரைசல் உள்ளிட்டவற்றை இருப்பில் வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.
கோடை வெயிலின் தாக்கம் மற்றும் வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க வைப்பது அவசியம் ஆகும்.
நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் அதிக தண்ணீர் அருந்த வேண்டும். பொதுமக்கள், குறிப்பாகக் குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு உப்பு சர்க்கரை நீர் கரைசல், எலுமிச்சை சாறு ஆகியவை உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவும். பருவகால பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். காற்றோட்டமான இடங்களில் வசிக்க வேண்டும். மெல்லிய பருத்தி ஆடைகள் சரும நோய்கள் வராமல் தடுக்கும்.
வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கவும். காலணி அணியாமல் செல்வது பாதிப்பை அதிகரிக்கச் செய்யும். செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல், புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும். அவசர உதவி, ஆலோசனைக்கு 104 என்ற சுகாதார துறை உதவி மையத்தை அழைக்கலாம் என்றனர்.