

சென்னை: தமிழகத்தில் ஊழல், கள்ளச்சாராய இறப்புகள் தொடர்வதால் அதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரி 29-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல்களையும், வன்முறைச் சம்பவங்களையும் தடுத்து நிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பல்வேறு வகைகளில் தன் குடும்பத்தை வளப்படுத்தும் வேலைகளில் மட்டுமே முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய திமுக ஆட்சியின் அமைச்சர்களோ, வாக்களித்த மக்களை கேலியும், கிண்டலும் செய்து, மிரட்டும் வகையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் நாட்டில் ஊழல் நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத் திறமையின்மை ஆகியவற்றால், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை கடுமையாக சீர்குலைந்துள்ளது. மாநிலத்தில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கு ஆளும் திமுக அரசே பொறுப்பாகும். கடந்த ஒரு வாரத்தில், 25 பேர் கள்ளச் சாராயத்தால் இறந்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம், ஆளும் கட்சியினர் கள்ளச் சாராய விற்பனையில் நேரடியாக ஈடுபட்டுள்ளதே ஆகும். டாஸ்மாக் மதுக் கடைகளில் சட்ட விரோத பார்களை 24 மணி நேரமும் நடத்தி, போலி மதுபானங்களை விற்பனை செய்து, மக்களின் உயிரை காவு வாங்கும் அபாய செயலில் ஈடுபடுவோருக்கு திமுக அரசு துணை போகிறது. முதல்வரின் குடும்பத்தினரால், சினிமா, ரியல் எஸ்டேட் துறைகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச் சாராயம், போலி மதுபானங்களால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், இவற்றுக்கு முழு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் அதிமுக சார்பில் கட்சி ரீதியிலான அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு வரும் 29-ம் தேதி காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.