

சென்னை: தமிழகத்தில் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் வகையில், ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை 2021-ல் தமிழக அரசு தொடங்கியது. இத்திட்டத்தில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள், டயாலிசிஸ் உள்ளிட்டநோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, அந்தந்த மாவட்டநிர்வாகங்கள் சார்பில், களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அதன்படி, மக்களை தேடி மருத்துவ திட்டத்தில், தொற்றா நோய்களுக்கு தொடர் சிகிச்சையை ஒரு கோடிபேருக்கும் மேல் பெறுகின்றனர்.
இந்நிலையில், குறைவான ஊதியம், பணிச்சுமை, கோடை வெயிலின் தாக்கம் போன்ற காரணங்களால் பலர் பணியை விட்டு விலகியுள்ளனர். இதனால் மாத்திரை, மருந்துகளுக்காக மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மக்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சில பணியாளர்கள் கூறியதாவது: மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் களப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.4,500 ஊதியம் வழங்கப்படுகிறது. பெட்ரோல் உள்ளிட்ட வேறு எந்த சலுகையும் இல்லை.ஒரு களப்பணியாளர் 7, 8 கிராமங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பலர் பணியை விட்டு விலகியுள்ளனர்.
தற்போது பணியாளர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், களப்பணியாளர்கள் வீடு, வீடாகச்செல்வதற்குப் பதில், ஒரே இடத்தில் முகாம் மாதிரி அமைத்து பயனாளர்களுக்கு மாத்திரை, மருந்துகளை வழங்கும்படி கூறுகின்றனர். பல கிராமங்களில் கள பணியாளர்கள் இல்லாததால், மக்களை தேடி மருத்துவ பயனாளர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாத்திரை, மருந்துகளை வாங்கிக் கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் புதிதாக பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்’’ என்றனர்.