Published : 23 May 2023 06:49 AM
Last Updated : 23 May 2023 06:49 AM

எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு: கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரம்

சென்னை: உலகத் தரத்தில் எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள நிலையில், காந்தி இர்வின் சாலையை ஒட்டியுள்ள ரயில்வே குடியிருப்பு கட்டிடங்கள் முழுமையாக இடிக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் இப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நூற்றாண்டு கடந்த சென்னை எழும்பூர் ரயில நிலையத்தை பல்வேறு நவீன வசதிகளுடன் உலகத்தரத்துக்கு மேம்படுத்த தெற்குரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த 50 ஆண்டுகளில் ரயில்கள் இயக்கம், பயணிகள் வருகை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, மறுசீரமைப்புசெய்யப்பட உள்ளது.

இதற்காக, ஹைதராபாத்தைச்சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு ரூ.734.91 கோடியில் கடந்த ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, எழும்பூர் நிலையத்தை அந்த நிறுவனம் வரைபடம் எடுத்து, அளவீடு செய்தது. தொடர்ந்து, காந்தி இர்வின் சாலை அருகேயுள்ள ரயில்வே குடியிருப்புகள், மறுபுறத்தில் பூந்தமல்லி சாலையை ஒட்டியுள்ள ரயில்வே குடியிருப்புகளை இடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலையத்தின் காந்தி இர்வின் சாலை அருகே ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகளுக்கான குடியிருப்புகள், தனி வீடுகள் என 45 வீடுகள் இருந்தன. இவற்றை இடித்து, இந்த இடத்தில் அண்மையில் பூமி பூஜை நடத்தப்பட்டது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன.

பூந்தமல்லி சாலையை ஒட்டியுள்ள ரயில்வே குடியிருப்பில்120-க்கும் மேற்பட்ட வீடுகளைஇடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணி முடிந்த பிறகு, கட்டுமானப் பணிகள் தொடங்கும். இதுதவிர, ரயில் ஓட்டுநர் அறை, டிக்கெட் பரிசோதகர் அறை தவிர, மற்ற அலுவலக கட்டிடங்களும் இடிக்கப்படும்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் தற்போது உள்ள பார்சல் அலுவலகம் அருகே ரயில்வே அலுவலகம் அமைய உள்ளது. ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி கட்டிடம் இடிக்கப்படாது. மறுசீரமைப்பு பணிகளை 3 ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x