தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு நிதி: அமைச்சர் உதயநிதியிடம் முதல்வர் வழங்கினார்

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு நிதி: அமைச்சர் உதயநிதியிடம் முதல்வர் வழங்கினார்
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு சாம்பியன்ஸ அறக்கட்டளைக்கு, தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், விளையாடு தலைநகராக தமிழகத்தை மாற்ற பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தவும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும், நல்ல விளையாட்டுச் சூழலை உருவாக்கவும் அரசு முயன்று வருகிறது.

தமிழக அரசுக்கும், விளையாட்டுக்குப் பங்களிப்பவர்களுக்கும் இடையே தடையற்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், பெரு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து பெறக்கூடிய நிதியைப் பயன்படுத்தவும் “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, கடந்த மே 8-ம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த அறக்கட்டளைக்கு, தமிழக இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைவராகவும், துறைச் செயலரை துணைத் தலைவராகவும் கொண்ட, 7 பேர் அடங்கிய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்துவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, இளைஞர் நலத் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in