

சென்னை: தனியார் தொலைக்காட்சிகள் நடத்தும் அரசியல் விவாத நிகழ்ச்சிகளில் வேண்டுமென்றே பாஜக தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்படுவதாக தமிழக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
சமீப காலமாக தொலைக்காட்சிகளில் நடைபெறும் அரசியல் விவாத நிகழ்ச்சிகளில், வேண்டுமென்றே சில கட்சிகளின் தலைவர்களை குறிவைத்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இழிவுபடுத்தப்படுவதாக பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
டிஆர்பி ரேட்டிங்குக்காக.. குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாத நிகழ்ச்சிகளில் பாஜகவினர் பங்கேற்காமல் தவிர்க்கின்றனர். இதனால், சில இந்து அமைப்பினரை அழைத்து, விவாத நிகழ்ச்சிகளில் அமர வைத்துவிட்டு, எதிர்தரப்பில் சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் பேசும் சிலர், பாஜக குறித்தும், பாஜக தலைவர்கள் குறித்தும் அவதூறாக பேசுவதாக பாஜகவினர் தரப்பில் கூறப்படுகிறது.
இதுபற்றி பாஜக ஊடகப் பிரிவு மாநில தலைவர் ரங்கநாயகலு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: சில தனியார் தொலைக்காட்சிகள் தங்கள் டிஆர்பி ரேட்டிங்குக்காக அரசியல் விவாதங்களை நடத்துகின்றன.
பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களை விவாத மேடைகளில் சிலர் இழிவாக பேசுவதை பார்த்தால், அது விவாத மேடையா, போர்க்களமா என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்துகிறது. விவாத மேடைகளில் தலைவர்கள் குறித்து இழிவாக பேசப்படுவதை தடுப்பது ஊடகங்களின் கடமை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.