

செங்கல்பட்டு: ஆவடி காவல் ஆணையரகத்தின் புதிய ஆணையராக ஏ.அருண், செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக வி.வி.சாய் பிரணீத் ஆகியோர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஆவடி காவல் ஆணையரகத்தின் முதல் ஆணையராக இருந்து வந்த சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு காவல் பயிற்சி அகாடமியின்பயிற்சி பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை ஏடிஜிபியா இருந்த ஏ.அருண் ஆவடிகாவல் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஆவடி காவல் ஆணையரகத்தின் புதிய ஆணையராக நேற்று பொறுப்பேற்றார்.
செங்கை எஸ்பி: செங்கல்பட்டு மாவட்டம், கடந்த2019 நவம்பர் 29-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதேபோல் செங்கல்பட்டு காவல் மாவட்டமும் உருவாக்கப்பட்டது. முதல் காவல்க கண்காணிப்பாளராக கண்ணன் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சுந்தரவர்த்தனம், விஜயகுமார், அரவிந்தன், சுகுணாசிங், பிரதீப் ஆகியோர் எஸ்.பி.யாக பணியாற்றினர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக கண்காணிப்பாளராக இருந்த அ.பிரதீப் பணியிடமாற்றம் மாற்றப்பட்டார். அதனை தொடந்து மதுரை மாநகர தெற்கு துணை காவல் ஆணையராக பணியாற்றி வந்தவி.வி.சாய் பிரணீத் செங்கல்பட்டு மாவட்ட புதிய காவல்கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைதொடர்ந்து மாவட்டத்தின் 7-வது கண்காணிப்பாளராக நேற்று சாய் பிரணீத் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல் உயர் அலுவலர்கள், ஆய்வாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதற்கு முன்பு இவர் கன்னியாகுமரியில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியை தொடங்கினார். பின்னர் திருவள்ளூர் மாவட்டத்திலும் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அதனை தொடர்ந்து சென்னைமாநகர காவலில் பொருளாதார குற்ற பிரிவு கண்காணிப்பாளராகவும் பின்னர் மதுரை தெற்குமாநகர காவல் துணை ஆணையராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.