Published : 23 May 2023 06:00 AM
Last Updated : 23 May 2023 06:00 AM
சென்னை: அதிமுக பேரணியால் கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி சாலைகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
திமுக ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்படும் என்றும், இதற்காக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணிநடத்தப்படும் என்றும் அதிமுக தெரிவித்திருந்தது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை 9 மணி முதலே சின்னமலை வேளச்சேரி சாலையில் அதிமுகவினர் குவியத் தொடங்கினர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து ஏராளமான அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டனர். குறிப்பாக, அண்ணா சாலை, வேளச்சேரி சாலை, ஆளுநர் மாளிகை செல்லும் சாலைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
இதனால் சின்னமலை பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் கூட்டம் அலை மோதியது. இதையடுத்து, இந்த சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
இந்த நெரிசலுக்கிடையில் பழனிசாமி வந்துசேர தாமதம் ஏற்பட்டது. அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பிறகு, பழனிசாமி தலைமையில் பேரணி தொடங்கியது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தைப் பேரணி கடந்ததும், போலீஸார் தடுப்புகள் அமைத்து, அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.
ஆளுநர் மாளிகைக்குச் செல்ல ஏற்கெனவே 9 பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 10-வது நபராக செல்லூர் ராஜுவும் பழனிசாமி சென்ற காரில் அமர்ந்திருந்ததால், அந்த காரை போலீஸார் அனுமதிக்கவில்லை. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, போலீஸாருக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதனால் அங்கு 20 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. செல்லூர் ராஜு காரை விட்டு இறங்கிய பிறகு, பழனிசாமியின் கார் மட்டும் ஆளுநர் மாளிகைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
அதிமுக பேரணி காரணமாக சின்னமலையிலிருந்து வேளச்சேரி, அடையாறு, பனகல் மாளிகை, கிண்டி போன்ற பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. அனைத்து சாலைகளிலும் பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் காத்திருந்தன. நெரிசலுடன் கடும் வெயிலும் நிலவியதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
5,500 பேர் மீது வழக்கு: இதற்கிடையில், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்திய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி மற்றும் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 5,500 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சேர்த்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT