Published : 23 May 2023 06:12 AM
Last Updated : 23 May 2023 06:12 AM
சென்னை: தனியார் பள்ளிகளின் கட்டண விகிதங்களை முறைப்படுத்தி புதிய பட்டியல் வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டஅறிக்கை: தமிழகத்தில் செயல்பட்டுவரும் 14 ஆயிரம் தனியார்மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் முடிவுக்கு வருகிறது.
தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு 2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த குழு தனியார்பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்கிறது. இப்போது நீதிபதி ஆர்.பாலசுப்பிரமணியம் தலைமையில் செயல்பட்டுவரும் குழுவின் கட்டண அறிவிப்பு சம்பந்தமான முடிவு வரவுள்ள சூழலில், புதிய விகிதங்களை நிர்ணயித்துஉடனடியாக வெளியிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. பல தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
கோவையில் பள்ளி கல்லூரிகளில் கட்டணம் செலுத்துவதற்காக பெற்றோர் தங்களுடைய நகைகளை விற்பதாக செய்திகள் வருகின்றன. எனவே, நியாயமான கட்டண விகிதத்தை உடனடியாக நிர்ணயிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
அதிக கல்வி கட்டணம் மற்றும் நன்கொடை வசூலிப்பதை தடுக்கவும், அரசின் கட்டண விகிதங்களை வெளியிடுவதுடன், கட்டாயகல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் விண்ணப்பம் செய்வோருக்கு உரிமையை உறுதி செய்யும் விதத்தில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும், தனியார் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, நியாயமான கல்வி செயல்பாட்டைஉறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT