ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நாளை தொடக்கம்

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நாளை தொடக்கம்

Published on

சென்னை: தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் பொது மாறுதல் மற்றும் பணிநிரவல் திருத்திய கலந்தாய்வு அட்டவணைப்படி நாளை தொடங்கி வரும் 29-ம்தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022-23-ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பணி நிரவல் திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இணங்க, மேற்கண்ட பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை மே 22, 24, 26 ஆகிய நாட்களில்நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுகள் தள்ளிவைக்கப்படுகின்றன.

தற்போது திருத்திய கலந்தாய்வு அட்டவணைப்படி 2022-23 பொது மாறுதல் மற்றும் பணிநிரவல் நடைபெறும். அதன்படி, கடந்த ஆண்டுகளில் பணி நிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு நாளையும் (மே 24), இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மே 25-ம் தேதியும் நடைபெறும்.

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 26-ம் தேதியும், இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மே 29-ம் தேதியும் நடைபெறும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in