Published : 23 May 2023 06:09 AM
Last Updated : 23 May 2023 06:09 AM
சென்னை: ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தொடர்பாக காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுகட்டு என்பதெல்லாம் தமிழர்களின் வீர விளையாட்டு என்பதைமறந்து, 2011-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு காளைகளைக் காட்சிப் பட்டியலில் சேர்த்து ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ்அரசு தடை விதித்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளால் மத்திய சுற்றுச்சூழல், வன அமைச்சகம் கடந்த 2016-ம் ஆண்டு ஓர் அறிவிக்கையை வெளியிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு வழிவகை செய்தது. இந்த அறிவிக்கையை எதிர்த்துப் பல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றன.
அவசர சட்டம்... இந்தச் சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் எனப் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன். அதை ஏற்று, மத்திய அரசின் மிருக வதைத் தடுப்புச் சட்டத்தில் மாநில அளவிலான திருத்தங்களை மேற்கொண்டு, 2017-ம் ஆண்டு ஜன.21-ம் தேதி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட்டன.
இந்தச் சட்டத்தை எதிர்த்து சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து, 2017 -ம் ஆண்டுஎன்னால் கொண்டு வரப்பட்ட விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளது.
இடைப்பட்ட காலத்தில் கட்டுப்பாடுகள் என்ற போர்வையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற விளையாட்டுகளுக்கான குழு உறுப்பினர்கள் மீதும், காளைகளின் உரிமையாளர்கள் மீதும், விளையாட்டு வீரர்கள் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள காளை உரிமையாளர்களும், ஜல்லிக்கட்டு வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT