Published : 08 Oct 2017 11:06 AM
Last Updated : 08 Oct 2017 11:06 AM

டெங்கு காய்ச்சல் ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள்: மாணவர்களுக்கு மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் வேண்டுகோள்

மருத்துவ மாணவர்கள் டெங்கு காய்ச்சல் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலெட்சுமி வலியுறுத்தியுள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் முறை பற்றிய மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. புற்றுநோயியல் துறை தலைவர் பேராசிரியர் எம்.ரமேஷ் வரவேற்றார்.

மருத்துவக் கல்லூரி டீன் டி.மருதுபாண்டியன் தலைமை வகித்துப் பேசினார்.

பயிற்சிக் கருத்தரங்கை தொடங்கிவைத்து துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலெட்சுமி பேசியதாவது:

பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தற்போது மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் தகுதியான ஆய்வு கட்டுரைகளை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே அவர்கள் இறுதி ஆண்டு தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அந்த கட்டுரைகள், இதற்கு முன்பு மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இருக்கக் கூடாது.

நாம் எழுத இருக்கும் ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச அளவில், தேசிய அளவில் யாரும் இதற்கு முன்பு ஆய்வு செய்து சமர்ப்பித்துள்ளார்களா என்பதைப் பார்த்து தகுதியான ஆராய்ச்சி கட்டுரைகளை எழுத வேண்டும். அதற்கு பேராசிரியர்கள் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். மற்றவர்கள் எடுக்காத தலைப்பில் தகுதியான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தால் அந்த ஆய்வுகளுக்கு பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் கிடைக்கும். இதற்காகவே மருத்துவ பல்கலைக்கழகத்தில் தற்போது ஆய்வு வழிமுறைகள், அறிவியல் ஆய்வு கட்டுரைகள் எழுதும் முறை பற்றி தனியாக இரு பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பயிற்சிகள் தேவை

மருத்துவ துறையில் தற்போது சிகிச்சை, மருத்துவ வசதிகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதுபோல் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும், அதன் கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதனால், மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்படும் இதழ்கள், மற்ற இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை எழுத பழக வேண்டும். பட்டமேற்படிப்பு மருத்துவ படிப்புகள் ஆராய்ச்சி சம்பந்தமாகவே இருக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு

தற்போது டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தீவிரமாக பரவுகிறது. இக் காய்ச்சல் பரவுவதற்கான காரணங்கள் குறித்து ஆய்வில் ஈடுபட்டு அதற்கான கட்டுரைகளை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கலாம். அது, டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு உதவக்கூடும். ஆய்வுகளும், ஆராய்ச்சி கட்டுரைகளும் மட்டுமே சிறந்த மருத்துவரை உருவாக்கும். மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அவர்களுடன் இணைந்த நர்சிங் கல்லூரி மாணவர்கள், கிராமங்களில் 4 முதல் 5 நாட்கள் தங்கி டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் கிராமங்களுக்கு சென்று இப்பணிகளில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x