Published : 23 Oct 2017 05:19 PM
Last Updated : 23 Oct 2017 05:19 PM

அமைச்சர் ஜெயக்குமாருக்கு மீனவ சமுதாயம் நிச்சயமாக பாடம் புகட்டும்: ராமதாஸ்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இன்ஜின்களைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் மீது காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்திய அமைச்சர் ஜெயக்குமாருக்கு மீனவ சமுதாயம் நிச்சயமாக பாடம் புகட்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "வங்கக்கடலில் சீன இன்ஜின் பொருத்தப்பட்ட படகுகளை இயக்கும் அமைச்சர் ஜெயக்குமாரின் பினாமிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியியுள்ளது.

இந்தத் தடியடியில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அமைச்சருக்கு ஆதரவாக காவல்துறையினர் நடத்திய தடியடி கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்களும், பினாமிகளும் தங்களின் படகுகளில் சீன இன்ஜின்களைப் பயன்படுத்தி சென்னை காசிமேடு வங்கக்கடல் பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர்.

சக்தி வாய்ந்த சீன இன்ஜின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவதால், அவற்றை தடை செய்ய வேண்டும் என்று காசிமேடு உள்ளிட்ட வடசென்னை மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், சீன இன்ஜின்களை பயன்படுத்துபவர்கள் அமைச்சர் ஜெயக்குமாரின் பினாமிகள் என்பதால் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி காசிமேடு மீன்வளத்துறை அலுவலகம் முன் மீனவர்கள் சாலைமறியல் செய்தபோது தான் தடியடி நடத்தப்பட்டுள்ளது.

மீன்வளத்தை பாதுகாக்க வேண்டிய மீன்வளத்துறை அமைச்சரே தமது சுயநலத்திற்காக மீன்வளத்தை அழிக்கத் துடிப்பதும், அதற்கு எதிராக போராடிய மீனவர்களை காவல்துறையை ஏவி தாக்கி ஒடுக்குவதும் மன்னிக்க முடியாத குற்றங்கள் ஆகும்.

அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த அத்துமீறலுக்கு மீனவ சமுதாயம் நிச்சயமாக பாடம் புகட்டும். மீனவர்கள் மீது தடியடி நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் கோரிக்கையை ஏற்று சீன இன்ஜின்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x