Published : 23 Oct 2017 07:45 PM
Last Updated : 23 Oct 2017 07:45 PM

ஆன்லைனில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா மீது நடவடிக்கை தேவை: பிரதமரிடம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வலியுறுத்தல்

ஆன்லைனில் 'மெர்சல்' படம் பார்த்த ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இன்று வெளியிட்ட அறிக்கையில், ''நம் நாட்டின் அரசியல் தலைவர்களில் சிலர் தீபாவளி அன்று வெளியான 'மெர்சல்' படத்தின் மீது வைக்கும் விமர்சனத்தைக் கண்டு பெரிதும் காயமும் கவலையும் அடைந்துள்ளோம்.

மத்திய தணிக்கை வாரியம் மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சியான அமைப்பாகும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் பலதரப்பட்ட முடிவுகளை அடுத்து ஒரு திரைப்படம் பொதுமக்கள் பார்ப்பதற்குரியதே என்று சான்றிதழ் அளிக்கப்பட்ட பிறகு படத் தயாரிப்பாளர், இயக்குநர் அதன் எந்தப் பகுதியையும் அரசியல் நெருக்கடிக்காக மாற்ற வேண்டிய அவசியமில்லை. இந்நிலையில் மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள 'சர்ச்சைக்குரிய' வசனங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை, வலியுறுத்தல் எங்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் நாடும் இதனுடன் மாநில ஆளும் கட்சியும் மத்திய அரசும் ஆன்லைன், ஆஃப் லைன் திருட்டு விசிடிக்கு எதிராக போராடி வரும் நிலையில் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் விதமாக 'மெர்சல்' திரைப்படத்தை ஆன்லைனில் பார்த்ததாக செய்தியாளர் ஒருவரிடம் கூறியுள்ளார்.

ஒரு முன்னணி அரசியல் தலைவர் ஆன்லைனில் அந்தப் படத்தைப் பார்த்ததாகக் கூறியிருப்பது குறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வெட்கப்படுகிறது. மாநில சட்ட விதிகளின் படி அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவராகிறார். இது குறித்து நாங்கள் பிரதமர் அலுவலகத்தின் குறைதீர் பிரிவில் இதனை புகார் அளித்துள்ளோம். இந்தப் புகாரை பிரதமர் அலுவலகம் அங்கீகரிக்கவும் செய்துள்ளது

மேலும் இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பி, ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.

நாட்டின் தலைவர்கள் ஒரு திரைப்படத்தை திருட்டு விசிடியிலோ ஆன்லைன் மூலமாகவோ பார்த்தால் எங்கள் திரைத்துரை என்ன ஆகும்? சுமார் 10 லட்சம் பேர் பணியாற்றும் ஆண்டுக்கு 2,000த்துக்கும் மேற்பட்ட படங்களை எடுத்து வரும் திரைத்துறை என்ன ஆகும்?

ஒவ்வொரு குடிமகனின் உண்மையான புகார்களை பிரதமர் அலுவலகம் மிகவும் பொறுப்பாக அணுகி வருகிறது என்பதை நாங்கள் முழுதும் அறிகிறோம். எனவே பாஜக தலைவர் மீதான இந்தப் புகார் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சரியான விதத்தில் பாஜக தலைவர் ஹெச்.ராஜாவைக் கண்டிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x