

திருவண்ணாமலை: புனல்காடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி 10-வது நாளாக நேற்று நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் சிறுவர்கள் கைகளில் செடிகளுடன் பங்கேற்று முழக்கமிட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராம மலையடிவாரத்தில் மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி கடந்த மாதம் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டது. வேங்கிக்கால், ஆடையூர், அடி அண்ணாமலை உள்ளிட்ட ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பை இங்கு கொட்டப்பட்டன.
மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் குப்பை கிடங்கு அமைத்து பார்வையிட சென்ற ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் குப்பையை ஏற்றி வந்த வாகனங்களை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
இது குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக, வேங்கிக்காலில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற அரசு விழாவுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக கிடங்கில் குப்பை கொட்டும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அரசு விழா முடிந்ததும், குப்பை கொட்டும் பணி மீண்டும் தொடங்கியது.
இதையடுத்து, புனல்காடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து காஞ்சி சாலையில் கடந்த 13-ம் தேதி தொடங்கினர். இவர்களது போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது.
இப்போராட்டம் 10-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. அப்போது வாழை, செடிகள் உள்ளிட்ட பயிர்கள் மற்றும் எச்சரிக்கை பதாகைகளை கையில் பிடித்துக் கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் சிறுவர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் கிராம மக்களும், விவசாயிகள் சங்கத்தினரும் உடனிருந்தனர். குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
அப்போது விவசாயிகளும், சிறுவர்களும் கூறும்போது, “புனல்காடு கிராம மலையடி வாரத்தில் இயற்கையை பாதிக்கும் வகையில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் உள்ள குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு, அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் நச்சுப்புகை வெளியேறி, அப்பகுதி மக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதேபோன்ற ஒரு நிலை, புனல்காடு கிராம மக்களுக்கும் ஏற்படும். அறிவியல் பூர்வமாக பராமரிக்கப்படும் என்கின்றனர். இந்த அறிவியல் பூர்வமானதை, திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் உள்ள குப்பை கிடங்கில் செயல்படுத்திட வேண்டும்.
எங்கள் கிராமத்தில் குப்பை கிடங்கு அமைப்பதால், நிலத்தடி நீர் மாசடையும். குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாகும். விவசாயம் பாதிக்கும். எங்களது வாழ்வாதாரம் அழிந்துவிடும். மக்களையும், மண் வளத்தையும் பாதிக்கும் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டுவதற்கு, அந்தந்த ஊராட்சிகளிலேயே குப்பை கிடங்கு அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.