

திருப்பூர்: ''முதல்வரின் ஆலோசனைப்படி பணியாற்றுவேன்'' என்று புதியதாக பொறுப்பேற்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த சு.வினீத் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநராக பணியிட மாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில், சேலம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த தா.கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார் .
இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதிதாக பணியிடமாற்றம் மற்றும் பணி உயர்வு பெற்ற மாவட்ட ஆட்சியர்கள், 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம். அப்போது தமிழக முதல்வர், தமிழக அரசின் திட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமங்கள் , நகரங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைய உழைத்திட வேண்டும் என உத்தரவிட்டார். அதற்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
முதல்வரின் ஆலோசனைப்படி திருப்பூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் வளர்ச்சித் திட்டங்கள் சென்றடைய மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் , மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பணியாற்றுவேன்'' என்றார். தா. கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்டத்தின் 11-வது மாவட்ட ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது