Published : 20 Oct 2017 12:18 PM
Last Updated : 20 Oct 2017 12:18 PM

நமக்கு நாமே பாணியில் நவ.7 முதல் எழுச்சிப் பயணம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நமக்கு நாமே பயணம் போல் நவம்பர் 7 முதல் எழுச்சிப் பயணம் செல்ல உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிந்த பின்னர் தீர்மானம் பற்றி மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நமக்கு நாமே என எழுச்சிப்பயணம் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் சென்றது போல், விரைவில் எழுச்சிப்பயணம் செல்ல இருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலைத்தாண்டி, கட்சியை வளர்ப்பதைக் கடந்து, தமிழகத்தில் நடக்கின்ற இந்த குதிரை பேர ஆட்சியின் அவலங்களைப் பற்றி மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் வகையில் இந்தப் பிரச்சாரப் பயணம் அமையும்.

வருகின்ற நவம்பர் முதல் வாரத்தில் ஆரம்பித்து டிசம்பர் முதல் வாரத்தில் இந்த பயணம் முடியும். பயணத்திட்டங்கள் நான்கு நாட்களில் முடிவு செய்யப்படும்.

குட்கா பிரச்சினை, வாக்கி டாக்கி ஊழல் பிரச்சினைகளை மக்கள் மன்றத்தை தாண்டி சட்டரீதியாக எடுத்துச்சென்றுள்ளோம். உள்ளாட்சித்தேர்தல் பிரச்சினையில் நீதிமன்றம் அறிவிப்பாணை வெளியிட்டும் எதுவும் செய்யாமல் இருக்கிறார்கள். இதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளோம்.

நாகை மாவட்டம் பொறையார் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் கட்டிடம் இடிந்து எட்டுப் பேர் பலியாகியிருக்கிறார்கள். இது வேதனைக்குரியது. ஏற்கெனவே கட்டிடத்தின் மோசமான நிலை குறித்து, தொ.மு.ச.சார்பில் மனு அளித்திருக்கிறோம். ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருக்கிறோம்.

இவ்வாறு முக ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x