

சென்னை: பயணிகளிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுவாங்குவதைத் தவிர்க்க அரசு பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 19-ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ரூ.2 ஆயிரம் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறும் முடிவை அறிவித்துள்ளது. இதன் காரணமாக ரூ.2 ஆயிரம் நோட்டுகளை போக்குவரத்து நிர்வாகத்தால் வங்கியில் செலுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, நாளை முதல் (மே 23) நடத்துநர்கள் அனைவரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், பக்குவமாக எடுத்துரைத்து ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வழித்தடத்தில் வாங்குவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், வசூல் தொகையை பிறரிடம் மாற்றம் செய்வதைத் தவிர்க்கும்படி தகுந்த அறிவுரை வழங்குமாறு பொதுமேலாளர் மற்றும் அனைத்து கிளை மேலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாள்தோறும் ஒவ்வொரு கிளையிலும் நடத்துநர்களால் செலுத்தப்பட்ட வசூல் தொகையில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறித்த விவரத்தை கணக்குப் பிரிவு தெரியப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.