Published : 22 May 2023 06:11 AM
Last Updated : 22 May 2023 06:11 AM
சென்னை: திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடுவது என, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருணாநிதியின் நூற்றாண்டு ஜூன் 3-ம் தேதி, அவரது பிறந்தநாளில் தொடங்குகிறது. இதையொட்டி, தமிழக அரசு மற்றும் திமுக சார்பில் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 22) இரவு சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். இம்மாத இறுதியில் அல்லது ஜூன் 1-ம் தேதி அவர் தமிழகம் திரும்புவார் எனத் தெரிகிறது.
எனவே, கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்ட எம்.பி.க்கள், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.சி.பழனிசாமி, பொன்.முத்துராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, வருங்காலத் தலைமுறையினர் அவரை நினைவில் கொள்ளும் வகையில், எழுச்சியுடன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத் தீர்மானிக்கப்படுகிறது.
ஜூன் 3-ம் தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் வடசென்னையில் நடைபெறுகிறது.
ஜூன் 20-ம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை, பிஹார்முதல்வர் நிதிஷ்குமார் திறந்துவைக்கிறார். கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக் கூட்டம் என அன்றுமுழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 3-ம் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி வரை கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத் திட்டமிட வேண்டும். ஜூன் 3-ம் தேதி திமுகவின் அனைத்து அமைப்புகள் சார்பிலும் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்த வேண்டும்.
மேலும், ‘ஊர்கள் தோறும் திமுக’என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை நடத்தி, பழைய கொடிக் கம்பங்களைப் புதுப்பிக்க வேண்டும். அதேபோல, அரசின் அனுமதியுடன் அனைத்து மாவட்டங்களிலும் ‘எங்கெங்கும் கலைஞர்’ என்ற அடிப்படையில், அவரது சிலைகளை நிறுவ வேண்டும். 70 வயதுக்கும்மேற்பட்ட திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாணவர்கள், இளைஞர்களுக்கான போட்டிகளை நடத்த வேண்டும். மாவட்டந்தோறும் திமுகவினரின் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களைத் தேர்வுசெய்து, கல்வி உதவித்தொகை வழங்கலாம். அதேபோல, மாவட்டந்தோறும் “என்றென்றும் கலைஞர்” என்ற தலைப்பில் கருத்தரங்கம், பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். கணினி, இணையதள வசதியுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு படிப்பகங்களைத் தொடங்க வேண்டும்.
திமுகவில் உள்ள அனைத்து அணிகள் சார்பிலும், ஓராண்டு முழுவதும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் செயல்திட்டத்தை உருவாக்கி, தலைமையின் அனுமதி பெற்று, விமரிசையாக நடத்த வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழு நியமனம்: இந்நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட, மாவட்ட நிர்வாகத்துக்கு ஆலோசனைகளை வழங்கும் வகையில் திமுக தலைமைக் கழகம் சார்பில் குழு அமைக்கப்படுகிறது. இதில், எம்.பி.க்கள், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன், முன்னாள் எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
துணை முதல்வர் பதவி? - வழக்கமாக, திமுக உயர்நிலைசெயல்திட்டக் குழுக் கூட்டத்தில்,நிர்வாக ரீதியான மாற்றங்கள் குறித்த முடிவுகள் எடுக்கப்படுவதுண்டு. அந்த வகையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில், துணை முதல்வர் பதவி உருவாக்குவது குறித்தும் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகின. எனினும், அதுபோன்ற தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற் றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT